/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொழிலாளர் தட்டுப்பாடு! சரக்குகளுடன் லாரிகள் காத்திருப்பு: பல்லடம் தொழில் துறையினர் பரிதவிப்பு
/
தொழிலாளர் தட்டுப்பாடு! சரக்குகளுடன் லாரிகள் காத்திருப்பு: பல்லடம் தொழில் துறையினர் பரிதவிப்பு
தொழிலாளர் தட்டுப்பாடு! சரக்குகளுடன் லாரிகள் காத்திருப்பு: பல்லடம் தொழில் துறையினர் பரிதவிப்பு
தொழிலாளர் தட்டுப்பாடு! சரக்குகளுடன் லாரிகள் காத்திருப்பு: பல்லடம் தொழில் துறையினர் பரிதவிப்பு
UPDATED : மார் 16, 2025 03:13 AM
ADDED : மார் 16, 2025 12:09 AM

பல்லடம்: பல்லடத்தில், தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக, ஜவுளி மற்றும் கறிக்கோழி உற்பத்தி சார்ந்த நிறுவனங்களில், சரக்குகளுடன் லாரிகள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
பல்லடம் வட்டாரத்தில், விசைத்தறி ஜவுளி உற்பத்தி மற்றும் கறிக்கோழி உற்பத்தி தொழில் பிரதானமாக உள்ளன. இத்தொழில்களில், வடமாநிலம் மற்றும் தென் மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் அதிக அளவில் வேலை பார்க்கின்றனர். இத்தொழில்கள் சார்ந்த மூலப்பொருட்கள் வெளிமாநிலங்களில் இருந்து இங்கு வருவதும், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள், வெளி மாநிலங்களுக்கு செல்வதுமான பரிவர்த்தனைகள் தினமும் நடக்கின்றன.
விசைத்தறி ஜவுளி உற்பத்தி சார்ந்து, பஞ்சு, நுால் மற்றும் துணி பேல்கள், லாரிகளில் வருவதும், வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுவதும் வழக்கமான ஒன்று. இதேபோல், கறிக்கோழி உற்பத்தி சார்ந்த கோழி தீவனங்களும் வெளிமாநிலங்களில் இருந்து தான் அதிக அளவில் வருகின்றன. இவ்வாறு, லாரிகள் வாயிலாக நடந்து வரும் இந்த பரிவர்த்தனைகளில், சுமை துாக்கும் தொழிலாளர்களின் பங்கு மிக முக்கியமானது. சமீப நாட்களாக, தொழிலாளர்கள் தட்டுப்பாடு காரணமாக, இத்தொழில்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து தொழில் துறையினர் சிலர் கூறியதாவது:
வடமாநில சுமை துாக்கும் தொழிலாளர்கள், லாரியில் இருந்து மூட்டைகளை ஏற்ற இறக்க, ஒரு டன்னுக்கு, 50 ரூபாயும், தமிழக தொழிலாளர்கள், ஒரு டன்னுக்கு, 100 ரூபாய் வாங்குகின்றனர். கடந்த சில நாட்களாக, வடமாநில தொழிலாளர்கள், ஹோலி பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு சென்றதால், சுமை தூக்கும் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. திருப்பூரில் இருந்து தொழிலாளர்களை வரவழைத்தால், ஒரு டன்னுக்கு, 250 ரூபாய் கேட்கின்றனர். இதனால், ஐந்து மடங்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது. ஊருக்கு சென்ற வடமாநில தொழிலாளர்கள் திரும்ப ஒரு மாதம் வரை ஆகும் என்பதால், அதுவரை சுமை துாக்கும் தொழிலாளர் பற்றாக்குறையால் தொழில்கள் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.