சினிமா... சமீபகாலமாக, புதிய பரிணாமம் எடுத்து வருகிறது. மாறுபட்ட கதையம்சம்; கதாநாயகர்களின் மாறுபட்ட தோற்றம் மற்றும் நடிப்பு; இயக்குனர்களின் பிரமிக்க வைக்கும் இயக்கம்; இசையில் லயிக்க வைக்கும் இசையமைப்பாளர்கள் என, வெள்ளித்திரையில் ரசிகர்களின் மனதை சிறை பிடிக்கும் சினிமாக்கள் அதிகளவில் வெளிவருகின்றன.
தமிழ்த்திரை உலகில், ஹிந்தி சினிமாக்கள், தெலுங்கு சினிமாக்கள் கூட ரசிகர்களை ஈர்க்க துவங்கியிருக்கிறது. அதற்கேற்றாற் போல் பிற மொழி படங்கள், அந்தந்த மாநில மக்கள் பேசும் மொழியில் 'டப்பிங்' செய்யப்பட்டு, வெளியிடப்படுகிறது.
அந்த வரிசையில், சமீபத்தில் வெளியான புஷ்பா - 2 சினிமா, எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், ராவ் ரமேஷ், ஜகபதி பாபு, ஸ்ரீ லீலா என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்த, இந்த திரைப்படம் உலகம் முழுதும், திரையிடப்பட்ட இரு நாளில், 294 கோடி ரூபாயை அள்ளி குவித்திருக்கிறது என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ரசிகர்கள் மனநிலை
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணியம்: திருப்பூரில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் புஷ்பா - 2 சினிமா திரையிடப்பட்டிருக்கிறது; ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புள்ளது. தற்போதைய சூழலில் மாறுபட்ட கதையம்சம் கொண்ட சினிமாக்கள், கதாநாயகர்கள் எந்த மொழியை சார்ந்தவர்களாக இருந்தாலும், மக்கள் ரசிக்கின்றனர். தமிழ்ப்படங்கள் மட்டுமின்றி ஹிந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு என, எந்த மொழி சார்ந்த சினிமாக்களை ரசிக்கும் மனநிலை, ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.