/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தனி அடையாள எண் பெற கடைசி வாய்ப்பு
/
தனி அடையாள எண் பெற கடைசி வாய்ப்பு
ADDED : மார் 15, 2025 11:46 PM
பல்லடம்:விவசாயிகள், தனி அடையாள எண் பெறுவதற்கு, நாளை மறுதினம் வரை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக, பல்லடம் வேளாண் துறை அறிவித்துள்ளது.
இது குறித்து, பல்லடம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் அமுதா வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த காலங்களில், மத்திய மாநில அரசுகளின் திட்டங்களை பெறுவதற்காக, விவசாயிகள், ஒவ்வொரு முறையும் தங்களது பட்டா, சிட்டா, ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை வழங்கி, திட்டத்துக்காக விண்ணப்பித்து காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது.
விவசாயிகளுக்கு ஏற்பட்டு வரும் இந்த இடையூறுகளை களையும் நோக்கில், விவசாயிகளுக்கான தனி அடையாள எண் உருவாக்கப்பட்டது.
அதன்படி ஏற்படுத்தப்பட்ட வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ், விவசாயிகளின் சுய விபரங்களை பதிவு செய்ய வேண்டும். வேளாண் உழவர் நலத்துறை அலுவலர்கள் மற்றும் பொது சேவை மையங்களை அணுகி, விவசாயிகள், தங்கள் நிலம் தொடர்பான விபரங்களை இலவசமாக பதிவு செய்யலாம்.
எதிர்வரும் நாட்களில், விவசாயிகளுக்கு என உருவாக்கப்படும் தனி அடையாள எண் இருந்தால் மட்டுமே, மத்திய மாநில அரசுகளின் எந்த ஒரு திட்டத்தையும் விவசாயிகள் பெற்று பயன்பெற முடியும். இதற்காகவே, விவசாயிகள் தங்களது நிலம் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்யுமாறு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம்.
இதுதவிர, தனி அடையாள எண் பெறாத விவசாயிகள், மத்திய அரசின் பி.எம்., கிசான் திட்டத்தின் மூலம் ஆண்டு தோறும் பெற்று வரும், 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையை வரும் ஏப்., மாதத்தில் இருந்து பெற முடியாது.
பல்லடம் வட்டார வருவாய் கிராமங்களுக்கு உட்பட்டு, 3,403 விவசாயிகள், பி.எம்., கிசான் திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர். இதில், 1,875 விவசாயிகள் மட்டுமே தனி அடையாள எண் பெற்றுள்ளனர்.
மீதமுள்ள, 1,528 விவசாயிகள் தனி அடையாள எண் பெறாமல் இருப்பதால், இவர்கள், பி.எம்., கிசான் திட்ட உதவித்தொகை மட்டுமன்றி, மத்திய மாநில அரசுகளின் எந்த ஒரு திட்டத்திலும் பயன்பெற முடியாது. விவசாயிகள், தனி அடையாள எண் பெறுவதற்காக விண்ணப்பிக்கும் காலக்கெடு நாளை மறுநாள் நிறைவடைகிறது.
விடுபட்ட விவசாயிகள், உடனடியாக வேளாண் அலுவலகத்தை அணுகி, தங்களது நிலம் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து, தனி அடையாள எண் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.