/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'சிரிப்பு உள்ளே... கவலைகள் வெளியே'
/
'சிரிப்பு உள்ளே... கவலைகள் வெளியே'
ADDED : நவ 11, 2024 05:38 AM

திருப்பூர், : திருப்பூர் நகைச்சுவை அரங்கம் சார்பில், 'சிரிப்போம்... சிந்திப்போம்' நிகழ்ச்சி, ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் நேற்று நடந்தது. நகைச்சுவை அரங்கத்தின் செயலாளர் பூபதிராஜன் வரவேற்றார்.
டாப் லைட் குழும நிர்வாகி கவுசல்யா தலைமை வகித்தார். வாவிபாளையம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை தலைவர் மோகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
சிரிப்பு யோகா பயிற்சியாளர் சிரிப்பானந்தா, அரங்கில் இருந்த அனைவருக்கும் சிரிப்பு பயிற்சி அளித்தார். அவர் பேசுகையில், ''தவத்தை விட சிறப்பானது சிரிப்பு; வயிறு குலுங்க, மகிழ்ச்சியாக சிரிப்பதால், ஆயுள் கூடும். சிரிப்பும், மகிழ்ச்சியும் உள்ளே வந்தால், வீட்டில் உள்ள பிரச்னைகளும், கவலைகளும் வெளியே சென்றுவிடும்.
மூச்சு பயிற்சியை கண்டறிந்தவர்கள் இந்தியர்கள்; அதேபோல், சிரிப்பு பயிற்சியும் பலன் கொடுக்கும். வாழ்க்கை மிகச்சிறியது; அனைவரும் சந்தோஷமாக சிரித்து வாழ வேண்டும். பிறருக்கு எவ்வித துன்பமும் கொடுக்காமல், மகிழ்ச்சியை அளிக்க வேண்டும்,'' என்றார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, திருச்சி தேசிய கல்லுாரி பேராசிரியர் முனைவர் நீலகண்டன் பேசுகையில், ''கவலையை செரிக்கும் மருந்து சிரிப்புதான்; சிரிக்க தெரிந்தவருக்கு கவலை இருக்காது. மகிழ்வாக வாழ்வதே வாழ்நாள் வெற்றியாக மாறியிருக்கிறது. வந்தாரை வாழ வைக்கும் திருப்பூரின் உழைப்பு அசாத்தியமானது.
சிரிக்கவும் நேரம் ஒதுக்கியுள்ளது, ஊரில் நல்ல மாற்றத்தை வழங்கும். சாதிக்க அறிவு தேவைதான்; சந்தோஷமாக வாழ அறிவு தேவையில்லை; நல்ல ரசனை இருக்க வேண்டும்,'' என்றார்.