ADDED : ஜூன் 16, 2025 11:48 PM
திருப்பூர்; ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் பகுதி பார் அசோசியேசன் தலைவராக செயல்பட்டு வந்த வக்கீல் சக்ரவர்த்தி, 48, கடந்த 13ம் தேதி இரவு அவர் சோளிங்கரில் சுட்டுக் கொல்லப்பட்டார். கொலை வழக்கில் உரிய நடவடிக்கை கோரியும், வக்கீல்களுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்துக்கு கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.
நேற்று திருப்பூர் மாவட்டம் முழுவதும் அனைத்து கோர்ட்களிலும் வக்கீல்கள் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். மாவட்ட கோர்ட் வளாகத்தில், திருப்பூர் பார் அசோசியேசன், திருப்பூர் அட்வகேட்ஸ் அசோசியேசன், திருப்பூர் மாவட்ட கோர்ட் வக்கீல் சங்கம் ஆகிய அமைப்புகள் இந்த புறக்கணிப்பில் ஈடுபட்டன. அனைத்து கோர்ட்களிலும், கோர்ட் நடவடிக்கையில் பங்கேற்காமல் வக்கீல்கள் புறக்கணித்தனர்.
நேற்று விசாரணைக்கு வந்த வழக்குகள் வேறு தேதிகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டன. வக்கீல்கள் கோர்ட் நடவடிக்கையில் பங்கேற்காத நிலையிலும், நீதிபதிகள், அரசு வக்கீல்கள், கோர்ட் ஊழியர்கள் வழக்கம் போல் பணியாற்றினர்.