/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கம்பி வேலியில் சிக்கிய சிறுத்தை பாதுகாப்பாக மீட்பு :அடர்ந்த வனத்திற்குள் விடுவிப்பு

ADDED : அக் 30, 2025 01:00 AM

உடுமலை: ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக்கோட்டம், கொழுமம் வனச்சரகத்திற்குட்பட்ட ஆண்டிபட்டி பகுதியில், தனியார் விவசாய நிலத்திற்கு அமைக்கப்பட்ட கம்பி வேலியில், 2 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை ஒன்று சிக்கிக்கொண்டது.
இது குறித்து தகவல் கிடைத்ததும், ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ராஜேஷ், வனத்துறை டாக்டர்கள் வெண்ணிலா, மனோகரன், முத்துராமலிங்கம், வனச்சரக அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்ட குழுவினர் சம்பவ இடத்திற்குசென்றனர்.
பின், சிறுத்தைக்கு மயக்க மருந்து செலுத்தி, கம்பி வேலியிலிருந்து மீட்டனர். காயங்கள் ஏதும் இல்லாத நிலையில், சிறிய அளவிலான சிகிச்சைக்கு பின், வாகனத்தில் ஏற்றிச்சென்று, அடர்ந்த வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக விடுவித்தனர்.
கால்நடைகளை வேட்டையாடிய சிறுத்தையா? சங்கராமநல்லுார் தெற்கு, கொழுமம், ஆண்டிபட்டி, ஆத்துார் பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக சிறுத்தை ஒன்று வெளியேறி, கிராமங்கள், தோட்டத்துச்சாளைகளுக்குள் புகுந்து, நாய்கள், ஆடு மற்றும் கன்றுக்குட்டிகளை வேட்டையாடி, உணவாக்கி வந்தது. 'ருசி' கண்ட இந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து, வனத்திற்குள் விட வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, கம்பி வேலியில் சிக்கிய சிறுத்தையை மீட்டு, வனத்திற்குள் விட்டுள்ளதால், கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தையாக இருக்க வாய்ப்புள்ளது. தொடர்ந்து கண்காணித்தால் தெரிய வரும் என வனத்துறை யினர் தெரிவித்தனர்.