/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளி மாணவர்களுக்கு மரத்தடியில் பாட வகுப்பு
/
பள்ளி மாணவர்களுக்கு மரத்தடியில் பாட வகுப்பு
ADDED : ஜூலை 04, 2025 06:47 AM

திருப்பூர்; திருப்பூர், அவிநாசி ரோடு, குமார் நகர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், 1,620 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பள்ளியில், 25 வகுப்பறைகள் உள்ளன; அதிகபட்சமாக, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வில், 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பள்ளிக்கு நான்கு முதல் ஆறு வகுப்பறை கட்டடங்கள் கூடுதலாக தேவை.
இடவசதி இல்லாததாலும், இனி வகுப்பறை கட்டினால், மூன்றாவது தளமாகத்தான் கட்ட வேண்டும் என்ற நிலை உள்ளது. இப்பள்ளியில் ஆண்டுக்கு ஆண்டு அட்மிஷன் அதிகரித்து வருவதால், வேறு வழியின்றி, 50க்கும் அதிகமான மாணவ, மாணவியரை வெளியில், மரத்தடியில் அமர வைத்து பாடம் கற்பிக்கின்றனர்.
பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் குழு மூலம் கூடுதலாக பள்ளி கட்டடம் கட்ட தொடர்ந்து, அரசிடமும், தனியார் தொண்டு நிறுவனங்களிடமும் வலியுறுத்தி வருகின்றனர், இப்பள்ளி ஆசிரியர்கள்.இடம் இருக்கிறது மீட்க வேண்டும்
திருப்பூர், மணியகாரம்பாளையம் அருகே உள்ளது காஞ்சிபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி. இப்பள்ளியில், 525 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். ஏழு வகுப்பறைகள் உள்ளது. இருந்தபோதும், மாணவ, மாணவியரை அமர வைக்க போதிய வசதியில்லாததால், 25 - 30 குழந்தைகளை பள்ளிக்கு வெளியே மரத்தடியில் உட்கார வைத்து வகுப்பு நடத்தப்படுகிறது.
பள்ளியை சுற்றிலும், அரசு இலவச வீட்டுமனை பட்டாவாக வழங்கிய நிலம் உள்ளது. ஆனால், ஒரு சென்ட், இரண்டு சென்டம் பெற்றவர்கள் கூடுதலான இடத்தை ஆக்கிரமித்துள்ளதால், அரசின் இடமிருந்தும், ஆக்கிரமிப்பாக இருப்பதால், பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்ட பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.