/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தியானத்தில் மூழ்குவோம்.. தியானம் செய்வது எப்படி?
/
தியானத்தில் மூழ்குவோம்.. தியானம் செய்வது எப்படி?
ADDED : டிச 21, 2024 06:23 AM

இந்தியா உள்ளிட்ட நாடுகள் முன்மொழிந்த தீர்மானத்தை ஏற்று, டிச., 21ம் தேதியை சர்வதேச தியான தினமாக அனுசரிக்க, ஐ.நா., பொது சபை ஒருமனதாக ஒப்புதல் அளித்தது. கடந்த 2014ல், ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினமாக அறிவிக்கப்பட்டதற்கும், இந்தியாவே காரணமாக அமைந்தது.
ஒழுக்கம் நிலைபெறும்
நடராஜன், ஜோதி தியான பொறுப்பாளர், ஸ்ரீசத்யசாய் நிறுவனங்கள், முத்து நகர்
அதிகாலை, 3:00 முதல், 6:00 மணிக்குள் பிரம்ம முகூர்த்த தினத்தில் தியானம் செய்ய வேண்டும். அப்போது தான் அதற்கு உண்டான பலன் உரியவர்களுக்கு கிடைக்கும். சுய ஒழுக்கமுடன் வாழ மனதை ஒருமுகப்படுத்த வேண்டும்; மூச்சுப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்; அதன் பின்பே தியானம் செய்ய வேண்டும். ஒவ்வொரு படிநிலை பயிற்சிகளையும் சரிவரக் கற்று தியானம் செய்யும் போது, உடல் முழுமையான புத்துணர்ச்சி பெறும். 'ஓம்காரம்' சொல்லும் போது, கார்பன் டை ஆக்சைடு வெளியேறி, ஆக்சிஜன் கிடைக்கிறது.பள்ளி குழந்தைகளுக்கு துவக்கத்தில் இருந்து மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சி அளித்தால், உயர்கல்வி தேர்வுக்கு கவனம் சிதறாமல் படிப்பர்; சிறந்த முறையில் தேர்வு எழுதுவர். நம் உடல் பஞ்சபூதங்களால் ஆனது. ஐந்து விரல் முத்திரைகளை கற்றுத்தந்து பயிற்சி தரும் போது, உடல் நலம் பெறுகிறது; புதிய சக்தி பிறக்கும். தியானத்துக்கு வயது ஒரு எல்லை இல்லை. குழந்தைகள் துவங்கி பெரியவர்கள் வரை யார் வேண்டுமானலும் மன ஒரு நிலைப்பட தியானம் செய்யலாம். தியானம் ஒரு உடலை, ஒழுக்கத்தை நிலைப்படுத்தும் கலை.
----------------------------------------------------------------------------------------------------
சுய பரிசோதனை
கணேசன், மனவளக்கலை பேராசிரியர், எம்.கே.ஜி., நகர்
சர்வதேச தியான தினத்தின் நோக்கம், மன அமைதி, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகும். தியானத்தின் பயன்பாடு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான். தியான பயிற்சி மூலம் மன அழுத்தத்தில் இருந்து விடுபட முடியும்; மனதில் அமைதி திரும்பும். பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், இளம் தலைமுறையினர் மனதை ஒரு நிலைப்படுத்த தியானம் பெரும் உதவியாக இருக்கிறது. மனம் ஒருமைப்பட்டு விட்டாலே, கவனம் சிதறாது; தன்னம்பிக்கை வரும்; கல்வி மேலோங்கும்.
தியானம் மனதை ஒருநிலைப்படுத்தி, பேராசை, சினம், கடும் பற்று, முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வு - தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் ஆகிய ஆறு தீய குணங்கள், பொய், களவு, சூது உள்ளிட்ட ஐந்து பழிச்செயல்களில் இருந்து மீண்டு, மனித மனதை சீர்படுத்துகிறது; ஒவ்வொருவரும் தன்னை தானே சுய பரிசோதனை செய்வது தான் தியானம்.
'உள நிலையில் முன்னேற வேண்டுமென்றால், உடலை நீ வளம் காத்து ஒழுக வேண்டும்,' என்கிறார், வேதாத்திரி மகிரிஷி. உடலுக்கும் மனசுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மனம் சரியாக இருந்தால், உடம்பும் நல்ல படியாக இருக்கும். உடல் கெட்டு விட்டால், மனமும் கெட்ட விடும்.
மனமற்ற நிலை
செந்தில்நாதன், நிறுவனர், விவேகானந்த சேவாலயா, திருமுருகன்பூண்டி
சாதாரண வாழ்க்கையிலிருந்து உயர்ந்த வாழ்க்கை வாழ்வதற்கு, உடலும், மனமும் நமது கட்டுப்பாட்டில் இருப்பது அவசியமாகிறது. உடலும் மனமும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. இதில் ஏதேனும் ஒன்று பாதித்தாலும் மற்றொன்றும் பாதிப்புக்குள்ளாகிவிடும்.
உடலளவில் பலசாலியாக இருந்தாலும், மனதில் கவலை எழுந்துவிட்டால், உடலை பலவீனப்படுத்திவிடும். உடலை அசையாமல் வைத்திருந்தால் பலவீனமாகும்; மனம் அசைந்துகொண்டிருந்தால் பலவீனமாகும்.
இவ்விரு முரண்பாடுகளை சீராக செயல்படுத்தவே நம்முன்னோர், யோகிகளெல்லாம் உடற்பயிற்சிகளையும், மனப் பயிற்சிகளையும் அளித்துள்ளனர். உடலுக்கு உடற்பயிற்சிகள் இருப்பது போன்று மனதை ஒழுங்குபடுத்துவதற்கான மிகப்பெரிய அருமருந்துதான், தியானம்.
துாக்கத்தின் போது நாம் தானாகவே மனமற்ற நிலையை அடைகிறோம். அதே மனமற்ற நிலையை, முயற்சி செய்து அடைவதுதான் தியானம். பயிற்சியாலும், வைராக்கியத்தாலும் மனதை அடக்க முடியும்.
மனதை ஒருமுகப்படுத்த தெரியாததாலேயே, இன்றைய இளைய தலைமுறையினர் பலர் தவறான பாதைகளுக்கு சென்றுவிடுகின்றனர். பள்ளி பாடத்தில் தியானம் இடம்பெறாமல் போய்விட்டதும் துரதிர்ஷ்டவசமானதுதான். யோகா, தியான பயிற்சிகள் அளித்து, சிறந்த இளைய தலைமுறையினரை உருவாக்கவேண்டும்.
லட்சியம் உணர்வோம்
ரேணுகா, மாவட்ட பொறுப்பாளர், பிரம்மா குமாரிகள் ராஜ யோக தியான அமைப்பு:
தியானம் எனும் வார்த்தையின் பொருள் தொடர்பு -சம்பந்தம் என்பதாகும். ராஜயோக தியானம் -என்பது நம் ஆத்மா, இறைவனாகிய பரமாத்மாவுடன் சந்திப்பதாகும். அவர் மீதான உறுதியான அன்பு, நினைவு தியானத்திற்கு அடிப்படையாகும். இப்பயிற்சியின் மூலம் ஒருவர் தான் அடையும் ஆன்மீக சக்தியின் உதவியால், வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம். மனித குலத்துக்கு இறைவனின் வரப்பிரசாதம்.
தியானம், வாழ்வின் லட்சியத்தை உணர வைக்கிறது. மன அமைதி மற்றும் மகிழ்ச்சியை தருகிறது. பிரச்னைகளை எதிர்கொள்ள முடிகிறது. பயம், வெறுப்பு, பதட்டம், மன அழுத்தம் போன்றவற்றிலிருந்து விடுதலை அளிக்கிறது. ஆக்கபூர்வமான சிந்தனைகள் மற்றும் செயல் திறன் வளரும். மனரீதியான நோய்களை நீக்கி முழுமையான ஆரோக்கியம் பெறலாம். மனிதர்களாகிய நாம் மகான் ஆத்மாவாக உயர்வு பெற தியானம் உதவுகிறது.
பிரம்மா குமாரிகள் உடல், மனம், ஆன்மா மற்றும் உறவுகளின் துாய்மையை வளர்க்கும் ஆன்மீக வாழ்க்கை முறை குறித்து பயிற்றுவிக்கின்றனர்.
நேர்மறை எண்ணங்கள்
இளங்கோ, ஆசிரியர், வாழும் கலை பயிற்சி மையம்
வெளியுடலை சுத்தம் செய்ய தினமும் குளிப்பது போல், உள் உறுப்புகளை செம்மைப்படுத்த தினமும் தியானம் செய்ய வேண்டும்; சுத்திகரித்துக்கொள்ள வேண்டும். எதிர்மறை எண்ணங்கள் இல்லாமல், நேர்மறை எண்ணங்களை வளர்க்க வேண்டும். உலக தியான நாளாக அறிவிக்க, 'வாழும் கலை' அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் முழு முயற்சி எடுத்தார்.
தியானம் செய்வதால் மனதில், எதிர்மறை எண்ணங்கள் தோன்றாது. குழந்தைகளும் தியானம் செய்யலாம்; இதன்மூலம், கற்றல் திறனும், ஞாபக சக்தியும் மேம்படும்; கோபம் குறைந்து, மனதில் குவிப்புத்திறன் அதிகரிக்கும்.
குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவருக்கும் ஒரு வாரகால மூச்சு பயிற்சி, தியானம், உடற்பயிற்சி கற்பிக்கிறோம். குழந்தைகள், மொபைல் போன் மற்றும் 'டிவி'யை அதிகம் பார்க்காமல், படிப்பில் கவனம் செலுத்தும் வகையிலான பயிற்சி அளிக்கிறோம். மனதை ஒரு நிலைப்படுத்தும், மருத்துவ பலன் அளிக்கும் 'வாழும் கலை' யோகா பயிற்சி அளிக்கிறோம். பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியருக்கென, தனித்தனி பயிற்சிகள் உள்ளன. உடல் மற்றும் மனதளவில் மாற்றம் ஏற்படுவதை அனைவரும் உணர முடியும்.
உள்நிலையில் தெளிவு
கிருஷ்ணகுமார், ஒருங்கிணைப்பாளர், ஈஷா யோகா
தியானம், ஆசனம், பிராணயாமம் ஆகியவை இணைந்ததே யோகா. எவ்வளவு பணிப்பளு இருந்தாலும், தினமும் 20 நிமிடங்கள் தியானம் செய்தாலே போதும். பல்வேறு சோதனைகளை கடந்துவிடலாம். தியானம் செய்வதன் மூலம் மனதின் குவிப்பு தன்மை அதிகரிக்கும். ஞாபக மறதி இருந்தாலும் மாறி, ஞாபக சக்தி அதிகரிக்கும். தேவையில்லாத பயம், பதட்டம் இருக்காது. முக்கியமாக, 'நான் யார்' என்பது போல், தன்னை உணர்தல் வாயிலாக, தெளிவு கிடைக்கும்.
ஈஷா யோகா பயிற்சி மையத்தில், ஷாம்பவி மஹா முத்ரா என்ற, ஏழு நாள் பயிற்சி அளிக்கப்படும். திருப்பூரில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, தினமும் 2.50 மணி நேரம் என்ற வகையில், ஏழு நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதற்கு பிறகு, தினமும், 20 நிமிடம் பயிற்சி செய்தால் போதும்.
பள்ளி விடுமுறையில், குழந்தைகளுக்கான சிறப்பு தியான பயிற்சியும் அளிக்கப்படுகிறது.உள்நிலையில் தெளிவு, அமைதி மற்றும் ஆனந்தத்தை அனுபவித்து, இளைஞர்கள் தங்கள் வாழ்வின் வெற்றி இலக்குகளை அடைய, யோகா பயிற்சி வழிகாட்டியாக இருக்கும். மனம் செம்மையாவதுடன், உடலும் ஆரோக்கியமாகும்.