ADDED : அக் 26, 2025 03:04 AM

சு த்தமான காற்று, சுகாதாரமான சுற்றுச்சூழலை எதிர்கால சந்ததிகளுக்கு விட்டுச் செல்ல வேண்டிய கடமை, இந்த தலைமுறைக்கு உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. இதற்கு, வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம், மரம் வளர்ப்பு வாயிலாக பசுமை போர்வையை அதிகப்படுத்த வேண்டும்.
தமிழக அரசின் சார்பில், 'பசுமை தமிழ்நாடு இயக்கம்' திட்டத்தின் கீழ், வனத்துறை சார்பில் மரக்கன்று வழங்கி, அதை நடவு செய்து கொடுக்கும் திட்டம் அமலில் இருந்து வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை, ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக்கோட்டம் சார்பில், கடந்தாண்டு, 1.20 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன; கடந்தாண்டு நடப்பட்ட மரக்கன்றுகள் தழைத்து வளரத்துவங்கியுள்ளன. இந்தாண்டு, 1.64 லட்சம் மரக்கன்று நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
பராமரிப்பு மட்டுமே முதலீடு திருப்பூர் வனத்துறை ரேஞ்சர் வித்யா கூறியதாவது:
திருப்பூர் மாவட்டத்தில், வனத்துறை சார்பில் நாற்று உற்பத்தி செய்யப்பட்டு, இலவச மாக வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு, 1.64 லட்சம் மரக்கன்று நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை, 65 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
விவசாய நிலங்கள், பள்ளி, கல்லுாரி வளாகங்கள், தனியார் நிறுவனம் மற்றும் மருத்துவமனை வளாகங்களில், இத்திட்டத்தின் கீழ் மரக்கன்று நடவு செய்து தரப்படுகிறது.இதுவரை உடுமலை, மடத்துக்குளம், பல்லடம், தாராபுரம் பகுதியில், விவசாயிகள், தங்கள் விவசாய நிலங்களில் மரக்கன்று நடவு செய்ய ஆர்வம் காட்டியுள்ளனர்.
மகாகனி, மலைவேம்பு, தேக்கு மரக்கன்றுகளை வளர்ப்பதில் அவர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. மகிழம், மாமரம், மரநெல்லி, நாவல், கொடுக்காப்புளி, நாட்டுவேம்பு, புங்கன் உள்ளிட்ட மரக்கன்றுகளும் நடவு செய்து தரப்படுகிறது.
மழைக்காலம் முடிவதற்குள் மரக்கன்றுகளை நடும் பட்சத்தில், அவற்றுக்கு தேவையான நீர் தேவையை சீராக பெற முடியும். வனத்துறை சார்பில் நடவு செய்து தரப்படும் மரக்கன்றுகளை கண்காணித்து, பராமரிப்பது மட்டுமே, அந்த இடத்தை சேர்ந்தவர்களின் பொறுப்பு.
இவ்வாறு, அவர் கூறினார்.
இதுதான் நடைமுறை: தங்கள் விவசாய நிலம் அல்லது சொந்தமான இடங்களில் மரக்கன்று நட்டு வளர்க்க விரும்பும் விவசாயிகள், தனியார் அமைப்பினர், தங்களது நிலம் தொடர்பான ஆவணங்களை வனத்துறை வசம் ஒப்படைக்க வேண்டும். மரக்கன்றுளை வளர்ப்பதற்கேற்ப நீர் வசதி, மரக்கன்றுகள் சேதமடையாத வகையில் வேலி உள்ளிட்ட கட்டமைப்புகள் இருக்க வேண்டும்.
மரக்கன்று நட விருப்பம் தெரிவிப்போரின் இடங்களுக்கு நேரில் சென்று, அங்குள்ள மண்ணின் தன்மைக்கேற்ற மரங்களை வனத்துறையினர் பரிந்துரைப்பர். பின், மரக்கன்றுகளை நடவு செய்து தருவர். இதுகுறித்து மேற்கொண்டு தகவல் தேவைப்படுவோர், 70944 24944 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

