/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'இதயம் காப்போம்' பஸ் இயக்கம் துவக்கம்
/
'இதயம் காப்போம்' பஸ் இயக்கம் துவக்கம்
ADDED : நவ 30, 2024 04:45 AM

திருப்பூர் : திருப்பூர், காந்தி நகர் ரோட்டரி சங்கம், நவீன இதய பரிசோதனை கருவி களுடன் கூடிய 'இதயம் காப்போம்' பஸ்ஸை வடிவமைத்துள்ளது. 1.30 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த பஸ்சை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ரேவதி மெடிக்கல் சென்டரிடம் அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி, தாராபுரம் ரோட்டிலுள்ள வேலாயுதசாமி மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
விழாவுக்கு, ரோட்டரி மாவட்ட முன்னாள் கவர்னர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். ரோட்டரி கவர்னர் சுரேஷ்பாபு முன்னிலை வகித்தார். திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., விஜய குமார், ஏ.ஜி., மருத்துவமனை தலைவர் டாக்டர் முருகநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
'இதயம் காப்போம்' பஸ், ரேவதி மெடிக்கல் சென்டர் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஈஸ்வரமூர்த்தியிடம் வழங்கப்பட்டது. கலெக்டர் கிறிஸ்துராஜ், ரிப்பன் வெட்டி பஸ் இயக்கத்தை துவக்கி வைத்தார். 'இதயம் காப்போம்' பஸ் திட்ட கொடையாளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
ரோட்டரி திருப்பூர் காந்திநகரின் இதயம் காப்போம் திட்ட இயக்குனர் சையது முகமது அப்தல் கரீம் பேசுகையில், ''கடந்த 2021 - 22ம் ஆண்டில், இதயம் காப்போம் பஸ் திட்டத்தை செயல்படுத்த ஆயத்தமானோம். ரோட்டரி நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொழில்துறையினரின் ஒத்துழைப்போடு தற்போது இந்த திட்டம் செயல்வடிவம் பெற்றுள்ளது. பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இந்த பஸ்ஸை ரேவதி மெடிக்கல் சென்டரிடம் ஒப்படைப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது,'' என்றார்.
ரேவதி மெடிக்கல் சென்டர் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஈஸ்வரமூர்த்தி பேசியதாவது:
இதய நோய் ஏற்படும் அபாயம் உள்ளவர்களை முன்னரே கண்டறிந்து, சிகிச்சை வழங்கி, அவர்களின் உயிரை காப்பாற்றுவதே இந்த திட்டத்தின் நோக்கம். இந்த பஸ் திட்டம், திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள மக்களுக்கு பயனளிக்கும்.
நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கிராமங்கள் என, அனைத்து பகுதிகளுக்கும் நேரடியாக சென்று, இதய பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும்.
பஸ்ஸில், இ.சி.ஜி., - 4டி எக்கோ, மருத்துவர் அறை, நோயாளிகள் காத்திருப்பு அறை, குளிரூட்டப்பட்ட அறை, ஜெனரேட்டர் வசதிகள் உள்ளன. மருத்துவர்கள், செவிலியர்கள், முகாம் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பயிற்சி பெற்ற டிரைவர் குழுவினர் இருப்பர். உங்கள் பகுதிகளில் இதயம் காப்போம் பஸ் முகாம் நடத்த காந்தி நகர் ரோட்டரி, ரேவதி மெடிக்கல் சென்டரை, 97507 55455, 98430 88845 என்கிற எண்களில் அணுகலாம்.
இவ்வாறு, அவர் பேசினார்.
ரோட்டரி திருப்பூர் காந்திநகர் தலைவர் உமாகாந்த், செயலாளர் மணிமாறன், இந்த சேவை ஆண்டின் துவக்க தலைவர் லோகநாதன், செயலாளர் ரமேஷ்குமார், 'இதயம் காப்போம்' திட்டத்தின் தலைவர் சையது முகமது அப்துல் கரீம், 'சைமா' தலைவர் ஈஸ்வரன், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க பொருளாளர் கோபாலகிருஷ்ணன், அரசு மருத் துவ கல்லுாரி மருத்துவமனை 'டீன்' முருகேசன், சுகாதாரத்துறை இணை இயக்குனர் ராமசாமி மற்றும் ரோட்டரி சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.