ADDED : அக் 19, 2024 11:45 PM

''திரும்ப, திரும்ப பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெயை பயன்படுத்துவதால், மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது'' என்கிறார், திருப்பூர் ரேவதி மருத்துவமனை இதய சிகிச்சை நிபுணர்டாக்டர்.நாகராஜ்.
இதயம் காப்பது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
திருப்பூரில், இதயநோய் பாதிப்பு அதிகம் இருக்கிறது. குறிப்பாக, 30 முதல், 45 வயது இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கின்றனர். தெரு, வீதிகளில் அதிகளவில் உணவுக்கூடங்கள் வந்துவிட்டன. வெளியில் உண்ணும் பழக்கம் நிறைய பேருக்கு உண்டு. திரும்ப திரும்ப பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெயில் தயாரிக்கப்படும் உணவு உட்கொள்வதன் வாயிலாக, ரத்தத்தில் கெட்ட கொழுப்பு படிவது அதிகரிக்கும்; இது மாரடைப்பு ஏற்பட காரணமாகி விடும்.
நடுத்தர குடும்பத்தினர் மத்தியில், தற்போது தான் உடற்பயிற்சி குறித்த சிந்தனை ஏற்பட்டிருக்கிறது; உடற்பயிற்சி, விளையாட்டு பயிற்சியில் ஈடுபட வேண்டும். மாரடைப்பு ஏற்பட்டவுடன் முதல் ஒரு மணி நேரத்தில், அருகேயுள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று விட வேண்டும்; 3 மணி நேரத்துக்குள், ரத்தக்குழாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரி செய்துவிட்டால், பிழைத்துக் கொள்ளலாம். மாரடைப்பு ஏற்பட்டவர்கள் நடக்கக்கூடாது; இதனால், மாரடைப்பின் பாதிப்பு அதிகரிக்கும்.
மக்களின் உயிர்காக்கும் நோக்கில், ரேவதி மருத்துவமனை சார்பில், இதய பரிசோதனை உபகரணம் அடங்கிய பஸ் ஏற்பாடு செய்யவுள்ளோம். ஆங்காங்கே பரிசோதனை முகாம் நடத்தி, இதய சிகிச்சை தேவைபடுவோருக்கு உரிய ஆலோசனை வழங்க திட்டமிட்டுள்ளோம். அரசு அனுமதி கிடைத்தவுடன், ஒரு மாதத்தில் இந்த சேவை துவங்கும். ரேவதி மருத்துவமனையில், அக்., 31ம் தேதி வரை, சலுகை கட்டணத்தில் இதய நோய் பரிசோதனை முகாம் நடத்துகிறோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
மாரடைப்பு ஏற்பட்டவுடன் முதல் ஒரு மணி நேரத்தில், அருகேயுள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று விட வேண்டும்;3 மணி நேரத்துக்குள், ரத்தக்குழாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரி செய்துவிட்டால், பிழைத்துக் கொள்ளலாம்.