/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொழிலாளருக்கு வாழ்நாள் ஓய்வூதியம்
/
தொழிலாளருக்கு வாழ்நாள் ஓய்வூதியம்
ADDED : பிப் 06, 2025 02:18 AM

பல்லடம்,: ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த குஷ்னு ஹஷா மனைவி கீதா ஹஷா, 30. மூன்று குழந்தைகள் உள்ளனர்.
காங்கயம், காடையூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் கீதா ஹஷா வேலை பார்த்து வந்தார். கடந்த ஆண்டு மார்ச் 9ம் தேதி, பணியில் இருந்தபோது, எதிர்பாராத விதமாக, இயந்திரத்தில் இவரது வலது கைசிக்கி, கையை இழக்க நேரிட்டது.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கண்டூர் ஓரான் மகள் சுனிதா குமாரி, 19. பல்லடம் அடுத்த, காமநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறார். கடந்த ஆண்டு செப்., 15ம் தேதி, பணியில் இருந்த போது, இயந்திரத்தில் கை சிக்கி இடது கை ஆள்காட்டி விரல் துண்டானது. இருவரும், இ.எஸ்.ஐ., காப்பீடு திட்டத்தின் கீழ் உள்ளதால், இருவருக்கும் வாழ்நாள் ஓய்வூதியம் பெறுவதற்கான அனுமதி கிடைத்தது.
பல்லடம் இ.எஸ்.ஐ., கிளை மேலாளர் ராஜா கூறுகையில், ''கீதா ஹஷாவுக்கு, 89,110 ரூபாய் உதவித்தொகை மற்றும் 10,500 ரூபாய் மாத ஓய்வூதியம்; சுனிதா குமாரிக்கு, 4,560 ரூபாய் உதவித்தொகை மற்றும் 900 ரூபாய் மாத ஓய்வூதியமும் வழங்கப்படுகிறது'' என்றார்.
தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய ஆணையை, கிளை மேலாளர் வழங்கினார். காசாளர் ஜெயக்குமார், அலுவலர் சவுந்திரராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
இ.எஸ்.ஐ., சட்டப்படி, பணியின் போது அல்லது பணிக்கு செல்லும்போது அல்லது பணியிலிருந்து திரும்பும்போது விபத்து ஏற்பட்டு, உடலில் நிரந்தர ஊனம் ஏற்பட்டால், ஊனத்தின் சதவீதத்துக்கு ஏற்ப வாழ்நாள் முழுவதும் அவருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.
- ராஜா, பல்லடம் இ.எஸ்.ஐ.,
கிளை மேலாளர்.