/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'லிப்ட் - எஸ்கலேட்டர்' லைசென்ஸ் அவசியம்!
/
'லிப்ட் - எஸ்கலேட்டர்' லைசென்ஸ் அவசியம்!
ADDED : ஜூலை 08, 2025 12:31 AM
திருப்பூர்; அடுக்குமாடி கட்டடங்கள், குடியிருப்புகள், வணிக வளாகங்களில், 'லிப்ட்' அல்லது 'எஸ்கலேட்டர்' பயன்படுத்த, தமிழக அரசின் சட்ட விதிகளின்படி, தமிழ்நாடு அரசு மின் ஆய்வுத்துறை மூலமாக ஆய்வு செய்து உரிமம் பெறவேண்டும். அதற்காக, பல்வேறு விதிமுறைகளை பின்பற்றவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு மின் ஆய்வுத்துறை மின் ஆய்வாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கை:
அடுக்குமாடி கட்டடங்களில் உள்ள அனைத்து தளங்களுக்கும் முறையான கட்டட அனுமதி பெற்றிருக்க வேண்டும். 'லிப்ட்' அல்லது 'எஸ்கலேட்டர்' நிறுவவும், பராமரிக்கவும், தலைமை மின் ஆய்வாளரிடம் உரிமம் பெற்ற நிறுவனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும். தலைமை மின் ஆய்வாளரிடம் அனுமதி பெற்ற மின் ஒப்பந்ததாரர்கள் மட்டுமே, இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். 'லிப்ட்' அல்லது 'எஸ்கலேட்டர்'களுக்கு, உரிமம் பெறாமலும், உரிமம் புதுப்பிக்கப்படாமலும் இயக்குவது விதிமீறல்.
உரிமம் புதுப்பிக்கப்படாமல் உள்ள ஒவ்வொரு மாதத்திற்கும், தலா, 500 ரூபாய் தாமதக்கட்டணம் வசூலிக்கப்படும். 'லிப்ட்' அல்லது 'எஸ்கலேட்டர்' உரிமம் இல்லாமல் இருந்தால், உடனடியாக உரிமம் பெறப்பட வேண்டும்; உரிய காலக்கெடுவில், உரிமம் புதுப்பிக்கப்பட வேண்டும். ஆண்டு வருடாந்திர பராமரிப்பு ஒப்பந்தத்தை, சரியான நேரத்தில் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். 'லிப்ட்' அல்லது 'எஸ்கலேட்டர்' பயன்படுத்தும் அனைவருக்கும் விபத்து காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.
'லிப்ட்' மற்றும் 'எஸ்கலேட்டர்'களுக்கு, உரிய உரிமம் பெற்றும், புதுப்பிப்பித்தும், முறையாக பராமரித்து, பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு, https://tnei.tn.gov.in/ என்ற இணையதளத்தை தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.