/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'மின்னல் வேக' வீராங்கனை ஏஞ்சல்சில்வியா
/
'மின்னல் வேக' வீராங்கனை ஏஞ்சல்சில்வியா
ADDED : அக் 26, 2024 11:09 PM

சமீபத்தில், சென்னையில் நடந்த மாநில முதல்வர் கோப்பை போட்டியில் 100 மீ., ஓட்டத்தில் தங்கம், 200 மீ., ஓட்டத்தில் வெள்ளி வென்று சாதனை படைத்திருக்கிறார், ஏஞ்சல்சில்வியா,22.
திருப்பூரை சேர்ந்த இவருக்கு, ஜெய்வாபாய் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் போது, தடகள போட்டிகளில் பங்கேற்கும் ஆர்வம் உருவானது. மாவட்ட தடகள பயிற்சியாளராக இருந்த திவ்ய நாகேஸ்வரி பயிற்சி அளித்தார். 'நிதானம், பின், அதிவேகம்' என்ற தாரக மந்திரத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டார்.
பத்தாம் வகுப்பில் மாவட்ட குறுமைய போட்டியில், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி, பாராட்டு பெற்றார். பத்துக்கும் மேற்பட்ட மாவட்ட போட்டிகளில் பங்கேற்று, வெற்றி பெற்றதன் மூலம், மாநில தடகள போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார்.
கேரள மாநிலம், கோழிக்கோட்டில் உள்ள பி.டி.உஷா அகாடமியில் இணைந்து, மூன்று ஆண்டுகள் தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளார். மாநில போட்டியில் பெற்ற வெற்றி அனுபவம், இவரை தேசிய போட்டிகளுக்கு அழைத்துச் சென்றது.
பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் சப்-ஜூனியர், ஜூனியர், ஓபன் நேஷனல் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று, வெற்றியை வசப்படுத்தினார். இதுவரை 25 மாநில போட்டிகளில் 100 மீ., போட்டிகளில் தங்கம் வென்றுள்ளார். 15க்கும் அதிகமான தேசிய சான்றிதழ்களைத் தனதாக்கியுள்ளார்.
தேசிய தடகளத்தில் முதலிடம் பெறுவதையே இலக்காக கொண்டு பயணித்து வருகிறார்.
உடுமலை ஜி.வி.ஜி., கல்லுாரியில், எம்.ஏ., வரலாறு, இளங்கலை பட்டப்படிப்பு படித்து வரும் இவர், தற்போது, பெங்களூரு சாய் அகாடமி பயிற்சி மையத்தில் தங்கி, தீவிர தடகள பயிற்சி பெற்று வருகிறார். சாய் அகாடமி பயிற்சியாளர் சுரேஷ்குமார் வழிநடத்துகிறார்.
தினமும் 6 மணி நேர பயிற்சி
ஏஞ்சல்சில்வியா கூறியதாவது: தினமும் நான்கு முதல் ஆறு மணி நேரம் கட்டாய பயிற்சி மேற்கொள்கிறேன். மாவட்ட போட்டிகளில் பங்கேற்றும் போது இருந்த சவால், மாநில போட்டியில் இரு மடங்காகவும், தேசிய போட்டியில், பத்து மடங்காகவும் அதிகமானது.
ஓபன் நேஷனல், ஜூனியர் நேஷனல் போட்டி களில் மூன்றாமிடம் பெறுவதே பெரும் சவாலாக இருந்தது. தடகளத்தில் வெற்றியை நெருங்க வேண்டும் என்றால் கூட, நாம் அதற்கு பல மாதங்கள் உழைப்பை செலவிட வேண்டும்; கடுமையாக பயிற்சி பெற வேண்டும்.
பிற மாநிலங்களில் நடக்கும் தேசிய போட்டியில் பங்கேற்க செல்லும் போது, முதலில், மனதளவிலும், பின் உடல் அளவில் நாம் பயிற்சி பெற்று தயாராகி இருக்க வேண்டும். அப்போது தான், சாதிக்க முடியும். 100 மீ., ஓட்டத்தில் வெற்றி பெற, 'டார்கெட் லைன்' முடிவெடுத்து ஓட துவங்குவேன்.
இந்த போட்டியை இந்த நேரத்துக்குள் முடிக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே பலமுறை பயிற்சி எடுத்து, முயற்சிப்பேன். வரும், டிச., மாதம் நடக்கவுள்ள அகில இந்தியா தடகள போட்டியில் முதலிடம் பெற தயாராகி வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.