/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொங்கல் சீசனுக்கு சுண்ணாம்பு உற்பத்தி தீவிரம்; பாரம்பரிய தொழிலை காக்க வலியுறுத்தல்
/
பொங்கல் சீசனுக்கு சுண்ணாம்பு உற்பத்தி தீவிரம்; பாரம்பரிய தொழிலை காக்க வலியுறுத்தல்
பொங்கல் சீசனுக்கு சுண்ணாம்பு உற்பத்தி தீவிரம்; பாரம்பரிய தொழிலை காக்க வலியுறுத்தல்
பொங்கல் சீசனுக்கு சுண்ணாம்பு உற்பத்தி தீவிரம்; பாரம்பரிய தொழிலை காக்க வலியுறுத்தல்
ADDED : ஜன 12, 2025 11:14 PM

உடுமலை; தைப்பொங்கல் திருநாளுக்காக, உடுமலை பகுதிகளில், சுண்ணாம்பு உற்பத்தி தீவிரமடைந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே, ஜல்லிபட்டி, ஆலாம்பாளையம், எரிசனம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், பாரம்பரியமாக சுண்ணாம்பு உற்பத்தி மேற்கொள்ளும் சூளைகள் உள்ளன.
ஒரு சில இடங்களில் உள்ள ஓடைகளில் மட்டும் கிடைக்கும் வெள்ளை பாறைக்கற்கள், சுண்ணாம்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. அவற்றை, சிறு, சிறு கற்களாக உடைத்து, சூளைகளில் வேக வைத்து சுண்ணாம்பு உற்பத்தி செய்யப்படுகிறது. சூளைகளில் கற்கள் வேக வைக்க, கரிக்கட்டைகள், விறகு மற்றும் தேங்காய் மட்டைகள், தொட்டிகள் பயன்படுத்தப்படுகிறது.
பாரம்பரியமான சுண்ணாம்பு கற்கள், பட்டுப்புழு வளர்ப்பு மனைகள், கோழிப்பண்ணைகள், தென்னை மரங்கள், தோட்டத்துசாளைகள், கால்நடை பண்ணைகளில் கிருமிநாசினியாக பயன்படுத்தப்படுகிறது. இன்றளவும் கிராமங்களில் வெள்ளையடிக்கவும், கட்டடங்களுக்கு சுருக்கிப்போடுவதற்கும், சுண்ணாம்பு பயன் படுத்தப்படுகிறது.
இதனால், ஆண்டு முழுவதும் குறைந்த உற்பத்தி இருக்கும் நிலையில், பொங்கல் பண்டிகைக்கு சீசன் களைகட்டியுள்ளது. கடந்த ஒரு மாதமாக சுண்ணாம்பு உற்பத்தி கூடுதலாகியுள்ளதோடு, விற்பனையும் அதிகரித்துள்ளது.
உற்பத்தியாளர்கள் கூறியதாவது: தொழில் நுட்ப வளர்ச்சியால் சுண்ணாம்பு பயன்பாடு குறைந்ததால், உற்பத்தி செய்யும் சூளைகள் குறைந்துள்ளன. பாரம்பரிய முறையை மாற்றாமல், இன்றளவும் பலர் சுண்ணாம்புக்கல், அல்லது சுண்ணாம்பு பவுடர் வாங்கி பயன்படுத்துகின்றனர்.
தென்னை மரங்களின் அடிப்பகுதியில் வெள்ளை அடிப்பது, பட்டுப்புழு, கோழிப்பண்ணைகளிலும் சுண்ணாம்பு பயன்படுத்தப்படுகிறது.
இருப்பினும், பாரம்பரிய முறையில், இன்றளவும் கிராமங்களில், தோட்டத்துசாளைகள், கால்நடைகள் கட்டும் இடங்களில் பொங்கல் பண்டிகைக்கு சுண்ணாம்பு அடிக்கும் வழக்கம் நீடிக்கிறது. இதனால், பொங்கல் சீசனில் கூடுதலாக விற்பனையாகிகிறது.
பாரம்பரிய தொழிலை காக்கும் வகையில், அரசு சிறு, குறு தொழில் பட்டியலில் சுண்ணாம்பு சூளை தொழிலை இணைத்து, கடன் உதவி உள்ளிட்ட நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.