/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளி அருகே மதுக்கடை; மாணவியருக்கு அச்சுறுத்தல்
/
பள்ளி அருகே மதுக்கடை; மாணவியருக்கு அச்சுறுத்தல்
ADDED : நவ 09, 2024 12:35 AM
திருப்பூர்; திருப்பூர், காலேஜ்ரோடு, ரயில்வே ஸ்டேஷன் ரோடு, புஷ்பா தியேட்டர் ரோடு சந்திப்பு பகுதியில், தேவாங்கபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. ரயில்வே சுரங்கபாலத்தை கடந்து வந்தால், ஜெய்வாபாய் பள்ளியும், அருகிலேயே நஞ்சப்பா பள்ளியும் அமைந்துள்ளது.
திருப்பூர் வடக்கு பகுதியில் இருந்து பஸ்சில் வரும் மாணவியர், புஷ்பா தியேட்டர் பஸ் ஸ்டாப்பில் இறங்கி, ரயில்வே சுரங்கபாலம் வழியாக, ஜெய்வாபாய் பள்ளிக்கு வருகின்றனர். இவ்வாறு பள்ளிகள் அருகருகே இருந்தும், மிக அருகாமையில் மதுக்கடை இயங்கி வருகிறது.
பள்ளியில் இருந்து, 150 மீட்டர் தொலைவுக்குள் அமைந்துள்ள மதுக்கடையால், 'குடி'மகன்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ரயில்வே சுரங்கப்பாலம் அருகே சென்று படுத்துக்கொள்வதால், மாணவியர் அவ்வழியாக சென்றுவர மிகவும் தர்மசங்கடமான நிலை ஏற்படுகிறது.
திருப்பூர் மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் இணைந்து, மாணவிகளுக்கு பாதிப்பாக இருக்கும், சர்ச்சைக்குரிய மதுக்கடையை, அப்பகுதியில் இருந்து அகற்ற வேண்டும் என, கோரிக்கை வலுத்து வருகிறது.
இப்பிரச்னை குறித்து, பெற்றோர் சிலர் கூறுகையில், 'குடிமகன்கள் தொல்லையால், மாணவியர் அச்சத்துடன் நடமாட வேண்டியுள்ளது. எனவே, மாணவியர், பெண்கள் நலன்கருதி, காலேஜ் ரோட்டில், பள்ளிக்கு அருகே உள்ள மதுக்கடையை விரைவாக அகற்ற வேண்டும். இது விஷயத்தில், கலெக்டர் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்,' என்றனர்.