ADDED : அக் 07, 2024 01:15 AM

திருப்பூர், குமரன் மகளிர் கல்லுாரியில், முன்னாள் மாணவியர் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் வசந்தி தலைமை வகித்தார். முன்னாள் மாணவியர்கள் சங்க துணை தலைவர் சாவித்திரி, செயலாளர் தாமரைச்செல்வி, பொருளாளர் தேவிப்பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லுாரி நிர்வாக அலுவலர் நிர்மல்ராஜ், திருப்பூர் கட்டட சங்க செயலர் செல்வி, வீரபாண்டி கூட்டுறவு வீட்டு வசதி சங்க செயலர் நாகராஜ், முன்னாள் மாணவியர் சங்க குழு உறுப்பினர்கள் மற்றும் கல்லுாரி துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பேரவை பொறுப்பு மாணவியர் பலர் பங்கேற்றனர்.
கல்லுாரி துவங்கிய ஆண்டு முதல், 2023 வரை படிப்பு முடித்து வெளியேறிய, 500க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவியர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். சந்திப்பின் ஒரு பகுதியாக மாணவியர் 'செல்பி கார்னர்', ஆடை, நகை ரகங்கள் விற்பனை, பேன்சி டிரஸ் விற்பனை நடந்தது. தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது.
'போட்டோ ஸ்பாட்'டில் மாணவியர் எடுத்த போட்டோக்கள் உடனடியாக பிலிம் போட்டு தரப்பட்டது; 'புட்கார்னரில் அறுசுவை உணவை மாணவியர் உண்டனர்.
முன்னாள் மாணவியர் குடும்பத்துடன் பங்கேற்று, மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். இல்லத்தரசி, பணியாளர், ஊழியராக மாறிய சக தோழியருடன் அன்றைய, இன்றைய இன்ப, துன்பங்களை சகஜமாக பரிமாறிக்கொண்டனர். நிறைவாக கலைநிகழ்ச்சிகள், ஆட்டம், கொண்டாட்டத்துடன் நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன.