/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வசிப்பது ஓரிடம் - தொகுதி வேறிடம்: 11 ஆண்டு பிரச்னைக்கு தீர்வு: தேர்தல் கமிஷன் பார்வையாளர் உத்தரவு எதிரொலி
/
வசிப்பது ஓரிடம் - தொகுதி வேறிடம்: 11 ஆண்டு பிரச்னைக்கு தீர்வு: தேர்தல் கமிஷன் பார்வையாளர் உத்தரவு எதிரொலி
வசிப்பது ஓரிடம் - தொகுதி வேறிடம்: 11 ஆண்டு பிரச்னைக்கு தீர்வு: தேர்தல் கமிஷன் பார்வையாளர் உத்தரவு எதிரொலி
வசிப்பது ஓரிடம் - தொகுதி வேறிடம்: 11 ஆண்டு பிரச்னைக்கு தீர்வு: தேர்தல் கமிஷன் பார்வையாளர் உத்தரவு எதிரொலி
ADDED : நவ 25, 2024 06:17 AM

திருப்பூர்; திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட பூம்புகார் நகர் மேற்கு பகுதியில் உள்ள, 108 வாக்காளர் பெயர்களை, பல்லடம் தொகுதிக்கு மாற்றம் செய்ய, நேற்று சிறப்பு முகாம் நடந்தது.
திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகம் கட்டு வதற்காக, ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்த, 45 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. பூம்புகார் நகர் மேற்கு பகுதியில், கோவில் நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் இருந்தன. அங்கு வசித்த மக்களுக்கு, பல்லடம் அறிவொளி நகரில் அடுக்குமாடி வீடு கட்டி, மாற்று வீடுகள் வழங்கப்பட்டன.
மொத்தம், 120க்கும் அதிகமான குடும்பங்கள் அங்கிருந்த இடம்பெயர்ந்தன. இருப்பினும், 11 ஆண்டுகளாக, குடிபெயர்ந்த குடும்பங்களை சேர்ந்த வாக்காளர் பெயர் நீக்கப்படவே இல்லை.
மா.கம்யூ., புகார்
திருப்பூர் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட, 115வது பாகத்தில், பழைய வாக்காளர் பெயர் நீக்கப்படாமல் உள்ளது. இதனால், அறிவொளி நகர் பகுதியில் ஓட்டுப்பதிவு செய்ய இயலவில்லை. இதுதொடர்பாக, மா.கம்யூ., சார்பில், வாக்காளர் பெயர்களை, பல்லடம் தொகுதிக்கு மாற்றிக்கொடுக்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.
தேர்தல் கமிஷன் பார்வையாளர் (வாக்காளர் பட்டியல்) மகேஸ்வரியிடம் இதுதொடர்பாக, மா.கம்யூ., நிர்வாகிகள் முறையிட்டனர். சிறப்பு முகாமை பயன்படுத்தி, பெயர் மாறுதல் செய்ய அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, 11 ஆண்டுகளாக மாற்றப்படாமல் உள்ள பெயர்களில், அறிவொளி நகரில் வசிக்கும், 108 வாக்காளர் பெயர்களை மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு முகாம்
பல்லடம் தாசில்தார் மற்றும் தேர்தல் பிரிவு அலுவலர்கள், பல்லடம் அறிவொளி நகர் பகுதியில் சிறப்பு முகாம் நடத்தினர். வாக்காளருக்கு, 'படிவம் -8' வினியோகம் செய்தனர். அந்தந்த வாக்காளர்களிடம் படிவங்களை வழங்கி, உரிய ஆதாரத்துடன் பூர்த்தி செய்து தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறுகையில், ''பூம்புகார் நகர் மேற்கு பகுதியில் வசித்த வாக்காளர் பெயர்கள், அறிவொளி நகருக்கு மாற்றப்படும். அதற்காக, 'படிவம் -8' வழங்கி பூர்த்தி செய்து பெறப்பட்டுள்ளது.
மீதியுள்ள வாக்காளரிடமும் படிவங்களை பெற்று, பல்லடம் தொகுதிக்கு மாற்றி, ஜன., மாதம் வெளியாகும் பட்டியலில் வெளியிடப்படும். அதை தொடர்ந்து, புதிய அடையாள அட்டைகளும் வழங்கப்படும்'' என்றனர்.