/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காற்றில் பறக்கும் திடக்கழிவு மேலாண்மை விதி; 'பல்க் வேஸ்ட் ஜெனரேட்டர்களை' கண்டு கொள்ளாத உள்ளாட்சிகள்
/
காற்றில் பறக்கும் திடக்கழிவு மேலாண்மை விதி; 'பல்க் வேஸ்ட் ஜெனரேட்டர்களை' கண்டு கொள்ளாத உள்ளாட்சிகள்
காற்றில் பறக்கும் திடக்கழிவு மேலாண்மை விதி; 'பல்க் வேஸ்ட் ஜெனரேட்டர்களை' கண்டு கொள்ளாத உள்ளாட்சிகள்
காற்றில் பறக்கும் திடக்கழிவு மேலாண்மை விதி; 'பல்க் வேஸ்ட் ஜெனரேட்டர்களை' கண்டு கொள்ளாத உள்ளாட்சிகள்
ADDED : மே 24, 2025 05:58 AM
திருப்பூர் : ''திருப்பூரில், குப்பை மேலாண்மை பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், திடக்கழிவு மேலாண்மை சட்டபடி 'பல்க் வேஸ்ட் ஜெனரேட்டர்' பட்டியல் தயாரிப்பதில், உள்ளாட்சி நிர்வாகங்கள் கவனம் செலுத்த வேண்டும்'' என்ற யோசனை வலுத்துள்ளது.
திருப்பூர் மாநகராட்சி, திருமுருகன்பூண்டி நகராட்சி உட்பட பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகங்களில் குப்பை மேலாண்மை என்பது, மிகப்பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. சில நாட்களாக, திருப்பூர் மாநகராட்சி சார்பில் காளம்பாளையம் பாறைக்குழியில் குப்பைக்கொட்ட அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது: திடக்கழிவு மேலாண்மை சட்டப்படி, ஒரு நாளுக்குள், 100 கிலோவுக்கு மேல் குப்பை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், ஓட்டல் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்டவை, 'பல்க் வேஸ்ட் ஜெனரேட்டர்' என வகைப்படுத்தப்படுகின்றன. அதாவது, அதிகளவு குப்பை வெளியேற்றும் நிறுவனங்கள் என்ற வகைபாட்டுக்குள் அவை கொண்டு வரப்படுகின்றன.
வெளியேறும் குப்பை, கழிவுகளை அந்நிறுவனத்தினர் வாயிலாகவே மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரித்து அப்புறப்படுத்த வேண்டும் என்பது, விதி. அதற்கான கட்டமைப்புகளை, அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்களின் அனுதியுடன் அவர்களே அமைத்துக் கொள்ளலாம். இதன் வாயிலாக, உள்ளாட்சி நிர்வாகங்களின் சுமை குறையும்.
ஆனால், திருப்பூர் மாநகராட்சி, பூண்டி நகராட்சி உள்ளிட்ட பிற நகராட்சிகளிலும், 'பல்க் வேஸ்ட் ஜெனரேட்டர்' பட்டியல் தயாரிக்கப்பட்டதாக தெரியவில்லை. மாநகராட்சி, நகராட்சிகளில் துாய்மைப்பணியை கான்ட்ராக்ட் எடுத்துள்ள தனியார் நிறுவனத்தினர் வாயிலாகவும், பேரூராட்சி, ஊராட்சிகளில் அந்தந்த உள்ளாட்சி நிர்வாகத்தினர் வாயிலாகவே அந்த குப்பைகளும் சேகரிக்கப்பட்டு வெளியேற்றப்படுகின்றன.
ஏற்கனவே, குப்பைகளை கொட்ட இடமில்லாமல் திணறும் உள்ளாட்சி நிர்வாகத்தினருக்கு இது, கூடுதல் தலைவலி தான் என்ற போதிலும், உள்ளாட்சி நிர்வாகத்தினரும், தனியார் கான்ட்ராக்டர்களும் விருப்பப்பட்டு, அந்த சிரமத்தை ஏற்றுக்கொள்கின்றனர். அதற்கான 'கவனிப்பை' பல்க் வேஸ்ட் ஜெனரேட்டர்களிடம் இருந்து பெற்றுக் கொள்கின்றனரா என்ற சந்தேகம் கூட எழுகிறது.
எனவே மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரகப்பகுதிகளில், 'பல்க் வேஸ்ட் ஜெனரேட்டர்' பட்டியல் தயாரித்து, திடக்கழிவு மேலாண்மை விதிப்படி, அவர்களே குப்பையை கையாள்வதற்குரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.