ADDED : செப் 06, 2025 06:51 AM
திருப்பூர்,; திருப்பூர் மாவட்ட அளவிலான லோக் அதாலத் என்னும் மக்கள் நீதிமன்றம் வரும் 13ம் தேதி நடைபெறவுள்ளது.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், லோக் அதாலத் என்னும் மக்கள் நீதிமன்ற நிகழ்வு திருப்பூர் மாவட்டத்தில் வரும் 13ம் தேதி நடக்கிறது. அன்று காலை 10:00 மணிக்கு திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் 8 அமர்வுகளும், அவிநாசி மற்றும் பல்லடத்தில் தலா மூன்று; காங்கயம், உடுமலை மற்றும் தாராபுரத்தில் தலா இரண்டு, ஊத்துக்குளி மற்றும் மடத்துக்குளத்தில் தலா ஒரு அமர்வு என மொத்தம் 22 அமர்வுகளில் வழக்கு விசாரணைகள் மேற்கொள்ளப்படும். இந்த அமர்வுகளில் சிறு குற்ற வழக்குகள்; சமரசத்துக்குரிய சிறு குற்ற வழக்குகள், வங்கி வராக்கடன் வழக்குகள், விபத்து இழப்பீடு வழக்குகள், குடும்ப நல வழக்குகள், செக் மோசடி வழக்குகள், சேவை நிறுவனம் தொடர்பான வழக்குகள் ஆகியன விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
இதில் இரு தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் வழக்குகளில் சமரச தீர்வு ஏற்படுத்தப்படும். இவற்றில் முடிவுக்கு வரும் வழக்குகள் மீது மேல் முறையீடு ஏற்றுக் கொள்ளப்படாது.
இதில் பங்கேற்று நிலுவையில் உள்ள தங்கள் வழக்குகளுக்கு தீர்வு காண விரும்புவோர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை அணுகலாம்.