/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வன எல்லையில் மாயமான அகழி கட்டமைப்புகளை... சீரமைக்கணும்! மனித-வனவிலங்கு மோதலை தவிர்க்க வாய்ப்பு
/
வன எல்லையில் மாயமான அகழி கட்டமைப்புகளை... சீரமைக்கணும்! மனித-வனவிலங்கு மோதலை தவிர்க்க வாய்ப்பு
வன எல்லையில் மாயமான அகழி கட்டமைப்புகளை... சீரமைக்கணும்! மனித-வனவிலங்கு மோதலை தவிர்க்க வாய்ப்பு
வன எல்லையில் மாயமான அகழி கட்டமைப்புகளை... சீரமைக்கணும்! மனித-வனவிலங்கு மோதலை தவிர்க்க வாய்ப்பு
ADDED : பிப் 23, 2026 05:19 AM

உடுமலை: கோடை காலத்தில், மனித-வனவிலங்கு மோதலை தடுக்க மண் மேடாக மாறியுள்ள அகழியை துார்வார வேண்டும்; விலங்குகளுக்கான தொட்டிகளில் குடிநீர் நிரப்பி, விளைநிலங்களுக்குள் அவை ஊடுருவதை தடுக்க வேண்டும் என உடுமலை பகுதி மலையடிவார விவசாயிகள் அரசை வலியுறுத்தியுள்ளனர்.
ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரகத்துக்குட்பட்ட மலைத்தொடர்களின் அடிவாரத்தில், பல ஆயிரம் ஏக்கரில், விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக, மானுப்பட்டி, ஜல்லிபட்டி, கொங்குரார் குட்டை, பொன்னாலம்மன்சோலை, ஆண்டியூர் உள்ளிட்ட கிராமங்களில், நீண்ட கால பயிராக மா மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
மானாவாரியாகவும், இறவை பாசனத்துக்கு, நிலக்கடலை, மக்காச்சோளம், மொச்சை, சோளம் உள்ளிட்ட சாகுபடிகளும் சீசனுக்கேற்ப சாகுபடியாகிறது.
இந்நிலையில், கோடை காலம் துவங்கியதும், வனப்பகுதியில் இருந்து வெளியேறி, யானை, மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் விளைநிலங்களில், ஊடுருவி பயிர் சாகுபடியை சேதப்படுத்த துவங்கியுள்ளன.
ஆண்டுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும் சாகுபடியை வனவிலங்குகள் சேதப்படுத்தும் போது, விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழக்கின்றனர்; மா மரங்களில் முக்கிய சீசனில், மாங்காய்கள் சேதமாவதால், நஷ்டம் ஏற்படுகிறது.
பயிர்களை காப்பாற்ற இரவு நேரங்களில் விவசாயிகள் விளைநிலங்களில், கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். அப்போது, வனவிலங்குகளால், விவசாயிகள் தாக்கப்படும் சம்பவங்களும் நடந்துள்ளது.
தென்மேற்கு பருவழை துவங்கும் வரை, குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்காக பல கி.மீ., தொலைவுக்கு வனவிலங்குகள் இடம் பெயரும் வாய்ப்புள்ளது.
நீண்ட காலமாக நீடிக்கும் இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
முன்பு, திருமூர்த்தி அணைப்பகுதியில் இருந்து ஒன்பதாறு செக்போஸ்ட் வழியாக, அமராவதி அணை வரை, 15 கி.மீ.,க்கும் அதிகமான தொலைவுக்கு, ரூ.33 லட்சம் செலவில், அகழி அமைக்கப்பட்டது. இதனால், வனவிலங்குகள் விளைநிலங்களுக்கு வருவது வெகுவாக குறைந்தது.
அதே வேளையில், உடுமலை, அமராவதி வனச் சரகங்களிலும் குறிப்பிட்ட பகுதிகளில், தொட்டி கட்டி, குடிநீர் நிரப்பி வந்தனர். கோடை காலத்திலும் குடிநீர் வனப்பகுதியிலேயே கிடைத்ததால், வனவிலங்குகள் இடம் பெயர்வது குறைந்தது.
இத்தகைய நடைமுறைகளை சில ஆண்டுகளாக வனத்துறையினர் கைவிட்டுள்ளனர். குறிப்பாக அகழி பராமரிப்பு முற்றிலுமாக கண்டுகொள்ளப்படாமல், அந்த கட்டமைப்பு மண் மேடாக மாறி விட்டது.
வனப்பகுதியிலும் வறட்சி தொட்டிகளிலும் குடிநீர் நிரப்புவதில்லை. இந்தாண்டு கோடை வெயில் முன்னதாகவே துவங்கி, வனப்பகுதியிலும் வறட்சி ஏற்பட்டு வருகிறது.
இத்தருணத்தில், அகழியை துார்வாரி, வனப்பகுதியிலுள்ள தொட்டிகளில், குடிநீர் நிரப்பினால், மனித-வனவிலங்கு மோதலை தவிர்க்க முடியும். இது குறித்து வனத்துறை வாயிலாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

