/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேசம் காப்பதில் நேசம்... தலைமுறை கடந்தும் மாறாத பந்தம்!
/
தேசம் காப்பதில் நேசம்... தலைமுறை கடந்தும் மாறாத பந்தம்!
தேசம் காப்பதில் நேசம்... தலைமுறை கடந்தும் மாறாத பந்தம்!
தேசம் காப்பதில் நேசம்... தலைமுறை கடந்தும் மாறாத பந்தம்!
ADDED : ஜன 26, 2025 03:31 AM

விடுதலை போராட்டத்தில் பங்கேற்று, நாடு சுதந்திரம் பெறவும், குடியரசு நாடாக மலரவும் இன்னுயிரை ஈந்தோர் பலர். அக்கால கட்டத்தில் வசதி வாய்ப்பு நிறைந்த, கண்ணுக்கெட்டிய துாரம் வரை நில, புலன்களை வைத்திருந்த ஜமீன் குடும்பத்தில் பிறந்தவர்கள் கூட, விடுதலை போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
விடுதலைக்கு பின்பும் கூட, நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் இயன்ற சேவையை செய்ய வேண்டும் என்ற வேட்கை அவர்களுக்குள் வியாபித்திருந்தது; இந்த உணர்வு, அவர்களின் தலைமுறை கடந்தும் தொடர்வது தான் சிறப்பிலும் சிறப்பு.
அந்த வரிசையில், திருப்பூரில் வாழ்ந்த அவிநாசிலிங்கம் செட்டியாரின் வழித்தோன்றல்கள் முன்னுதாரணமாக திகழ்கின்றனர். நாட்டின் விடுதலை போராட்டத்தில் பங்கேற்றவர், சட்டமன்ற மேலவை உறுப்பினர், கல்வி அமைச்சர், மாநிலங்களவை உறுப்பினர் என பல பதவிகளை வகித்தவர் அவிநாசிலிங்கம் செட்டியார். தமிழ் வளர்ச்சி கழகத்தை உருவாக்கியவர்.
கடந்த, 1934ல் கோவை, பெரியநாயக்கன்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயம் துவக்கினார்; அடிக்கல் நாட்டு விழாவில் காந்தியடிகள் பங்கேற்றார். 1951ல், அவிநாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை நிறுவினார். அறக்கட்டளை வாயிலாக, அவிநாசிலிங்கம் பள்ளியை துவக்கினார். 1957ல், அவிநாசிலிங்கம் மனையியல் கல்லுாரி உருவாக்கினார்; அது, 1988ல், பல்கலை அந்தஸ்து பெற்றது. அவரது வழித்தோன்றலாக, அவிநாசிலிங்கம் செட்டியார், தன் அண்ணன் கந்தசாமி செட்டியாரின் மகன் மீனாட்சி சுந்தரம் என்கிற மூர்த்தியை தத்து பிள்ளையாக்கி கொண்டார்.
அவிநாசிலிங்கம் செட்டி யாரின் பெற்றோர், சுப்ரமணிய செட்டியார், தாய் பழனியம்மாள் ஆகியோரின் நினைவாக, திருப்பூர் பழனியம்மாள் மற்றும் கே.எஸ்.சி., பள்ளி நிறுவ, தங்களது நிலத்தை தானமாக வழங்கினார் அவிநாசிலிங்கம் செட்டியாரும், அவரது சகோதரர்களும். அங்கு சில வகுப்பறை கட்டடங்களை கட்டிக் கொடுத்திருக்கிறார், மீனாட்சி சுந்தரம்.
பங்களா ஸ்டாப்பில் அவரது குடும்பத்தினர் தானமாக வழங்கிய நிலத்தில் தான், டி.எஸ்.கே., மகப்பேறு மருத்துவமனை செயல்படுகிறது. பெரிச்சிபாளையத்தில் தீயணைப்பு நிலைய கட்டடம் செயல்பட்ட நிலம், மீனாட்சி சுந்தரம் தானமாக வழங்கியது. காரமடையில் கே.வி.கே., எனப்படும், வேளாண் அறிவியல் நிலையத்தின் பொறுப்பையும் ஏற்று நடத்துகிறார்.
திருப்பூர், மில்லர் ஸ்டாப் பகுதியில் கடந்த, 1949ல் கட்டப்பட்ட பொலிவூட்டப்பட்ட
பழமையான வீட்டில் மீனாட்சி சுந்தரம் வசித்து வருகிறார். 'காந்தி நிலையம்' என பெயரிட்டப்பட்ட அந்த வீட்டின் முகப்பில், காந்தியடிகளின் முழு உருவச்சிலை கம்பீரமாக காட்சியளிக்கிறது
மீனாட்சி சுந்தரத்தின் மகன்கள் ஹரிஹர பாலாஜி கந்தன், டாக்டர். ராஜேஷ் நித்தின் ஆகியோர் கூறியதாவது;
என் தந்தை, அவிநாசிலிங்கம் கல்வி அறக்கட்டளையில் தலைமை பொறுப்பேற்று, புதிய கட்டடங்களை கட்டி கொடுத்துள்ளார். தின மும், 250 மாணவிகளுக்கு இலவச மதிய உணவு வழங்குகிறார். ஏழை, நடுத்தர மாணவிகளின் கல்விக்கு துணை நிற்கிறார். 'லட்சுமி விலாஸ்' என்ற பெயரில் முதல் நிதி நிறுவனம் துவக்கி, பொறுப்பேற்று நடத்தினார்.
நுாறாண்டு கடந்த இந்நிதி நிறுவனம் தான், கோவை மாவட்டத்தின் முதல் நிதி நிறுவனம். கடந்த, 1996ல், அங்கு திருட்டு நடந்தது; அப்போது, தனது சொந்த பணம், 1.15 கோடி ரூபாயை கொடுத்து, வாடிக்கையாளர்கள் நஷ்டமடையாமல் பார்த்துக் கொண்டார் என்பது பலரும் அறிந்திராத உண்மை.
கல்விக்காக பெரும் சேவையாற்றிய அவிநாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை, 75 ஆண்டு விழாவை நிறைவு செய்ய இருக்கிறது. இதற்கு பெருமை சேர்க்கும் வகையில், அவிநாசிலிங்கம் பல்கலை வளாகம் அமைத்துள்ள சாலைக்கு, அவிநாசிலிங்கம் செட்டியார் பெயர் சூட்ட வேண்டும். கோவையில், அவருக்கு சிலை நிறுவ வேண்டும் என்பதே, எங்களது ஆசை; இதுகுறித்து, அரசுக்கு மனு அனுப்பவுள்ளோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.