/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'வழிபாட்டுக்கு அடிப்படையே அன்பு தான்'
/
'வழிபாட்டுக்கு அடிப்படையே அன்பு தான்'
ADDED : ஜூன் 17, 2025 11:30 PM

திருப்பூர்; 'அன்பு இல்லாமல் எதைச் செய்தாலும் இறைவன் ஏற்றுக்கொள்ளமாட்டார்' என, சைவ சித்தாந்த ஆசிரியர் சிவசண்முகம் பேசினார்.
கொங்கு மண்டல ஆடல் வல்லான் அறக் கட்டளை சார்பில், மாணிக்கவாசகரின் வரலாற்றை கூறும் 'திருவாதவூரடிகள் புராணம்' தொடர் சொற்பொழிவு, திருப்பூர் ஹார்வி குமாரசாமி மண்டபத்தில், கடந்த ஆக., 20 ல் துவங்கி நடைபெற்றுவருகிறது. வாரந்தோறும் செவ்வாய்கிழமை மாலை, 5:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரை நடைபெறும் இந்நிகழ்ச்சியில், சைவ சித்தாந்த ஆசிரியர் சிவசண்முகம், சொற்பொழிவாற்றி வருகிறார்.
நேற்றைய சொற்பொழிவில் சிவசண்முகம் பேசியதாவது:
நமக்கு ஒரு துன்பம் என்று சுவாமியிடம் முறையிட்டால், அவர் அத்துன்பத்தை கேட்டு, போக்கிவைப்பார். வழிபாட்டுக்கு அடிப்படையே அன்புதான். மாணிக்கவாசகர் போன்று நாமும், சிவபெருமான் மீது நீங்காத அன்பு வைக்கவேண்டும். அன்பு இல்லாமல் எதைச்செய்தாலும், நம்மால் இறைவனை நெருங்கமுடியாது; இறைவன் ஏற்றுக்கொள்ளமாட்டார். அன்பும், சிவமும் இரண்டல்ல; இரண்டும் ஒன்றே என்பதை உணர வேண்டும். திருப்பெருந்துறையில் மாணிக்கவாசகரை ஆட்கொண்ட சிவபெருமான், சிதம்பரத்துக்கு வரச்செய்து ஆட்கொண்டார். மாணிக்க வாசகர் முற்பிறவியில் செய்த திருந்திய தவமே இதற்கு காரணம். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் சிவனடியார்கள் உட்பட திரளானோர் பங்கேற்றனர்.