/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசியல் தலைவர்களை விட மக்களால் நேசிக்கப்பட்டவர்
/
அரசியல் தலைவர்களை விட மக்களால் நேசிக்கப்பட்டவர்
ADDED : ஜூலை 26, 2025 11:56 PM
கு டியரசுத் தலைவராகப் பதவி வகித்த காலங்களில் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் வழிகாட்டியாக இருந்தார். குடியரசுத்தலைவர் மாளிகையில் அதிகமான பொதுமக்கள் உள்ளே நுழைய முடிந்த காலகட்டம், கலாமுடைய காலகட்டமாகவே இருக்கும். பெரும்பகுதி விருந்தினர்கள் குழந்தைகள் - - மாணவர்கள்தான். அவரைச் சந்தித்துவந்த பலர் அவருடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க முடிந்தது. அவருடன் தொலைபேசியில் பேச முடிந்தது. மின்னஞ்சல் அனுப்பிப் பதில் பெற முடிந்தது. அவருக்குக் கடிதம் எழுதினால், நிச்சயம் பதில் வரும்.
“தனி மனிதப் பண்பு, திறன், எதிர்காலம் போன்றவற்றை வளர்த்தெடுக்கும் உன்னதமான வாழ்க்கைத் தொழில்தான் கற்பித்தல் பணி. ஒரு சிறந்த ஆசிரியர் என மக்கள் என்னை நினைத்தால் அதுதான் எனக்கு மிகப் பெரிய கவுரவம்” என்றவர் கலாம். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், மைசூர் பல்கலைக்கழத்தில் வருகைப் பேராசிரியராகவும் பணியாற்றினார்.
அரசியலுக்கு அப்பாற்பட்டு இயங்கிய, ஆனால் அரசியல் தலைவர்களை விடவும் மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்டார். காரணம் தேச வளர்ச்சியின் மீதும், எதிர்காலத் தலைமுறை மீதும் அவர் தொடர்ந்து அக்கறை செலுத்திவந்தார். நிலையான பொருளாதாரத்தை உருவாக்க தேசம் கொள்ள வேண்டிய பார்வை எனும் ஆக்கபூர்வமான கலந்துரையாடல் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட வேண்டும் என்று விரும்பினார்.
தேசத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்த வெளிநாடுகளை நம்பி இருக்கக் கூடாது என்று வலியுறுத்திய அவர், அதற்குப் பதிலாக தொலைநோக்குப் பார்வை கொண்ட நாடாளுமன்றம் உயிர்ப்பான செயல் திட்டங்களை உருவாக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.