/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நெல் சாகுபடியில் குறையும் விளைச்சல்: நோய்த்தடுப்பு பரிந்துரை தேவை
/
நெல் சாகுபடியில் குறையும் விளைச்சல்: நோய்த்தடுப்பு பரிந்துரை தேவை
நெல் சாகுபடியில் குறையும் விளைச்சல்: நோய்த்தடுப்பு பரிந்துரை தேவை
நெல் சாகுபடியில் குறையும் விளைச்சல்: நோய்த்தடுப்பு பரிந்துரை தேவை
ADDED : பிப் 02, 2024 11:14 PM
மடத்துக்குளம்:'நெல் சாகுபடியில், போதிய விளைச்சல் கிடைக்க தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்க வேண்டும்,' என, மடத்துக்குளம் வட்டார விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மடத்துக்குளம் தாலுகாவில், நெல் சாகுபடி பிரதானமாக உள்ளது. அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அடிப்படையில், பழைய, புதிய ஆயக்கட்டு பாசன பகுதியில், இரு போகங்களில் நெல் சாகுபடி மேற்கொள்கின்றனர்.
நடப்பு சீசனில், துங்காவி, கொமரலிங்கம் உள்ளிட்ட பகுதிகளில், நெல் நாற்று நடவு செய்து, வளர்ச்சித்தருணத்தில் உள்ளது. இந்நிலையில், பல்வேறு காரணங்களால், நெல் விளைச்சல் குறைவதை தடுக்க, வேளாண்துறையினர் உதவ வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
விவசாயிகள் கூறியதாவது: பருவமழை தாமதிக்கும் போது, அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதில் மாற்றம் ஏற்படுகிறது. இதனால், நாற்றங்கால் விடுதல், நடவு மற்றும் உரமிடுதல் போன்ற பணிகளை, சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப மேற்கொள்ள முடிவதில்லை.
அப்போது, பல்வேறு நோய்த்தாக்குதல் ஏற்பட்டு, நெல் விளைச்சல் குறைகிறது. போதிய விலையும் கிடைப்பதில்லை.
முன்பு, நெல் நடவு முதல் அறுவடை வரை, பல்வேறு தொழில்நுட்ப விழிப்புணர்வு வேளாண்துறையால் வழங்கப்படும். ஒற்றை நெல் சாகுபடி உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களுக்கு மானியமும் ஒதுக்கப்பட்டது.
தற்போது இந்த நடைமுறை இல்லை. வழக்கத்தை விட முன்பாக துவங்கிய கோடை வெயிலால் தற்போது பயிர்களில் நோய்த்தாக்குதல் தென்படுகிறது.
எனவே, மடத்துக்குளம் வட்டாரத்தில், நெல் சாகுபடி குறித்து, வேளாண்துறையினர் ஆய்வு செய்து நோய்த்தடுப்பு பரிந்துரைகளை வழங்க வேண்டும்.
இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.

