/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளிகளில் பராமரிப்பு பணிகள்; தலைமை ஆசிரியருக்கு உத்தரவு
/
பள்ளிகளில் பராமரிப்பு பணிகள்; தலைமை ஆசிரியருக்கு உத்தரவு
பள்ளிகளில் பராமரிப்பு பணிகள்; தலைமை ஆசிரியருக்கு உத்தரவு
பள்ளிகளில் பராமரிப்பு பணிகள்; தலைமை ஆசிரியருக்கு உத்தரவு
ADDED : அக் 26, 2025 03:11 AM
திருப்பூர்: பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு, மழையும் பெய்து வரும் நிலையில், பள்ளி வளாகம், சுற்றுச்சுவர், கட்டடங்களை பாதுகாக்கும் வகையில் முறையான பராமரிப்பு பணிகளில் கவனம் செலுத்த தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
பள்ளிக் கட்டடங்களின் வெளிப்புறம் மற்றும் உள்புறச் சுவர்களில் மேல் தளங்களில், கூரைகளில் கொடிகள் மற்றும் செடிகள் போன்றவை வளர்ந்திருந்தால், வளர்ந்துள்ள செடிகள் கட்டடத்தில் சுவர்களில் ஈரப்பதம் ஊடுருவி கட்டடத்தின் உறுதித்தன்மை பாதிக்க கூடும். மேலும் இவை பள்ளிகளின் பாதுகாப்புக்கு அபாயத்தை வழிவகுக்க கூடியவை. எனவே, உடனடியாக அவற்றை அகற்ற வேண்டும்.
மாணவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள பள்ளிகளில் உள்ள பழுதடைந்த கட்டடங்களின் அருகில் மாணவர்கள் செல்லாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சுற்றுச்சுவர் பாதுகாப்பற்ற நிலையில் இருந்தால், அதன் அருகில் மாணவ, மாணவியர் செல்ல கூடாது என எச்சரிக்க வேண்டும்.
பள்ளி வளாகத்தில் மின்கசிவு ஏற்படாத வண்ணம் மின்சாதனங்களையும், மின்கம்பிகளையும் எச்சரிக்கையுடன் பராமரிக்க வேண்டும். மாணவர்கள் மின் சாதனங்களையும், மின்கம்பிகளையும் தொடாதவாறு கண்காணிக்க வேண்டும்.
பள்ளியில் ஒவ்வொரு கட்டடத்தின் மேற்கூரையிலும், மழைநீர் தேங்காதவாறும், மழைநீர் வடிவதற்கான துவாரங்கள் இலை, தழைகள் மற்றும் குப்பைகளால் அடைபடாதவாறும் துாய்மை இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மழை காலங்களில் பள்ளி வளாகத்துக்குள் மழைநீர் தேங்காமல் இருக்க உரிய முன்னேற்பாட்டு நடவடிக்கையை உடனடியாக செய்ய வேண்டும். பள்ளி வளாகத்தில் விழும் நிலையில் உள்ள மரங்களை அப்புறப்படுத்த வேண்டும். இதற்கான செலவினத்தை பள்ளி பராமரிப்பு நிதி அல்லது அனுமதிக்கப்பட்ட பிற நிதி வழியாக செய்யலாம்.
பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே சுத்தமான பள்ளி வளாகத்தை பராமரிக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
பள்ளி கட்டடங்கள் துாய்மை மற்றும் பொலிவான தோற்றத்தை உறுதி செய்ய வேண்டும். பள்ளிகளில் உள்ள பழுதுகள், குறைகளை சரிசெய்ய மாணவர்களை எக்காரணம் கொண்டும் ஈடுபடுத்தக்கூடாது.
மழை காலங்களில் மாணவர்கள் நனையாமலும், இடி, மின்னல் போன்ற தாக்குதலுக்கு உட்படாமலும், அந்த சமயத்தில் மரங்களுக்கு கீழ் ஒதுங்குவதால் ஏற்படும் அபாயம் குறித்தும் தக்க அறிவுரை வழங்க வேண்டும்.

