/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மக்காச்சோளம் அறுவடை தீவிரம் ;ஏக்கருக்கு 10 குவிண்டால் மகசூல் அதிகரிப்பு
/
மக்காச்சோளம் அறுவடை தீவிரம் ;ஏக்கருக்கு 10 குவிண்டால் மகசூல் அதிகரிப்பு
மக்காச்சோளம் அறுவடை தீவிரம் ;ஏக்கருக்கு 10 குவிண்டால் மகசூல் அதிகரிப்பு
மக்காச்சோளம் அறுவடை தீவிரம் ;ஏக்கருக்கு 10 குவிண்டால் மகசூல் அதிகரிப்பு
ADDED : பிப் 19, 2025 09:35 PM

உடுமலை; உடுமலை பகுதிகளில், மக்காச்சோளம் அறுவடை தீவிரமடைந்துள்ள நிலையில், நடப்பு பருவத்தில் மகசூல் அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளில், மக்காச்சோளம் சாகுபடி பிரதானமாக இருந்தது.
மக்காச்சோளத்திற்கு, கோழி, மாட்டுத்தீவன உற்பத்தி நிறுவனங்கள் மட்டுமின்றி, எத்தனால் உற்பத்திக்கும் மக்காச்சோளம் தேவை அதிகரிப்பு காரணமாக, கடந்த பருவத்தில், விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடியில் ஆர்வம் காட்டினர்.
பி.ஏ.பி.,- அமராவதி பாசனம், இறவை மற்றும் மானாவாரி பாசனத்தில், கடந்தாண்டு ஆக.,- செப்., மாதங்களில் ஏறத்தாழ, 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டது.
கடந்தாண்டு தென்மேற்கு பருவ மழை திருப்தியாக பெய்த நிலையில், மக்காச்சோளம் சாகுபடி பருவத்தில் வட கிழக்கு பருவ மழையும் சிறப்பாக பெய்ததால், மக்காச்சோளம் நல்ல வளர்ச்சி பெற்றதோடு, தேவைக்கு ஏற்ப பெய்த மழை காரணமாக, படைப்புழு தாக்குதலும் பெருமளவு குறைந்தது.
உடுமலை பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோளம் அறுவடை தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. மழை பொழிவு மற்றும் மக்காச்சோளத்திற்கான நல்ல சீதோஷ்ண நிலை காரணமாக, படைப்புழு தாக்குதல் குறைந்த நிலையில், மகசூல் பெருமளவு அதிகரித்துள்ளது.
கடந்தாண்டு, இதே பருவத்தில், ஏக்கருக்கு, 27 குவிண்டால் மட்டுமே மகசூல் காணப்பட்ட நிலையில், நடப்பு பருவத்தில். 37 முதல், 40 குவிண்டால் வரை மகசூல் கிடைத்து வருவதோடு, விலையும் நிலையாக உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
உடுமலை அருகேயுள்ள வடபூதனத்தை சேர்ந்த விவசாயி சுப்ரமணி கூறியதாவது:
மக்காச்சோளம் சாகுபடியில் தற்போது, நல்ல மகசூல் கிடைத்துள்ளது. கடந்தாண்டு, ஒரு ஏக்கருக்கு, 27 குவிண்டால் மட்டுமே கிடைத்த நிலையில், விதை தேர்வு, பராமரிப்பு, படைப்புழு தாக்குதல் குறைவு உள்ளிட்ட காரணங்களினால், தற்போது, மகசூல், 10 குவிண்டால் வரை அதிகரித்துள்ளது.
ஒரு ஏக்கருக்கு, 37 குவிண்டால் வரை மகசூல் கிடைத்துள்ளது. ஏக்கருக்கு, உழவு, விதை, உரம், மருந்து என, 40 ஆயிரம் ரூபாய் வரை செலவானது. தற்போது ஒரு குவிண்டால், ரூ. 2,450 வரை விற்று வருவதால், கூடுதல் லாபம் கிடைத்துள்ளது.
இவ்வாறு, தெரிவித்தார்.

