/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மனசெல்லாம் மத்தாப்பு! மக்காச்சோளம் சாகுபடி பரப்பு அதிகரிப்பு; நோய் தாக்கம் குறைவால் மகசூல் அதிகரிக்கும்
/
மனசெல்லாம் மத்தாப்பு! மக்காச்சோளம் சாகுபடி பரப்பு அதிகரிப்பு; நோய் தாக்கம் குறைவால் மகசூல் அதிகரிக்கும்
மனசெல்லாம் மத்தாப்பு! மக்காச்சோளம் சாகுபடி பரப்பு அதிகரிப்பு; நோய் தாக்கம் குறைவால் மகசூல் அதிகரிக்கும்
மனசெல்லாம் மத்தாப்பு! மக்காச்சோளம் சாகுபடி பரப்பு அதிகரிப்பு; நோய் தாக்கம் குறைவால் மகசூல் அதிகரிக்கும்
ADDED : அக் 31, 2024 10:30 PM

உடுமலை ; உடுமலை பகுதிகளில் மக்காச்சோளம் சாகுபடி அதிகரித்த நிலையில், படைப்புழு உள்ளிட்ட நோய் தாக்குதலும் குறைந்து, பயிர் பூவெடுத்துள்ளது.
உடுமலை பகுதிகளில் மக்காச்சோளம் சாகுபடி பிரதானமாக உள்ளது. நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை அதிகரித்ததோடு, பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனம், அமராவதி பாசன நிலங்கள் மற்றும் இறவை, மானாவாரி பாசன நிலங்களிலும் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டது.
கோழி, மாட்டுத்தீவன உற்பத்தி நிறுவனங்கள் மட்டுமன்றி, எத்தனால் உற்பத்தி நிறுவனங்களுக்கும் மூலப்பொருளாக மக்காச்சோளம் பயன்படுத்தப்படும் நிலையில், தேவையும் அதிகரித்து, விலையும் உயர்ந்து காணப்பட்டது.
இதனால், உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் சுற்றுப்பகுதிகளில் மீண்டும் மக்காச்சோளம் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டினர். இப்பகுதிகளில் ஏறத்தாழ, 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. கடந்த, ஆக., மாதம் சாகுபடி செய்து மக்காச்சோளம் தற்போது, பூ மற்றும் கதிர் பிடித்து, அழகாக காணப்படுகிறது.
வழக்கமாக வறட்சி காரணமாக, மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல், பூச்சி மற்றும் நோய் தாக்குதல் காரணமாக, சாகுபடி பெரும் சவாலாக இருக்கும். நடப்பாண்டு, சாகுபடிக்கு தென்மேற்கு பருவ மழை உதவியது. வளர்ச்சி பருவத்தில், கடந்த மாதம் பெய்த மழை பெரிதும் கைகொடுத்தது.
பருவமழை காரணமாக, பயிர்கள் செழித்து வளர்ந்துள்ளதோடு, படைப்புழு உள்ளிட்ட நோய் தாக்குதலும் பெருமளவு குறைந்தது. இதனால், நடப்பாண்டு மக்காச்சோளம் சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தற்போது, உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோளம் பூ பருவத்தில் உள்ளதால், ஒரு மாதத்தில் அறுவடை துவங்கும் வாய்ப்புள்ளது.
வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது:
நடப்பாண்டு பருவமழைகள் திருப்தியாக பெய்ததோடு, மக்காச்சோளம் தேவை அதிகரிப்பு காரணமாக, நல்ல விலை கிடைக்கும் என்ற அடிப்படையில், விவசாயிகள் அதிக பரப்பில் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளனர்.
இந்நிலையில், பருவமழை திருப்தியாக பெய்ததால், நடப்பாண்டு மக்காச்சோளத்தில் படைப்புழு உள்ளிட்ட நோய் தாக்குதல்களும் குறைந்து, நல்ல வளர்ச்சி நிலையில் உள்ளது. இதனால், மகசூல் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
தற்போது, மக்காச்சோளம் பயிர் பூ பருவத்தில் உள்ள நிலையில், இம்மாத இறுதியில் அறுவடை துவங்கி, மார்ச் வரை நீடிக்கும் வாய்ப்புள்ளது. மக்காச்சோளம் விலை, ஒரு குவிண்டால், 2,550 முதல், 2,700 வரை உள்ளது. உடுமலை பகுதிகளில் அறுவடை துவங்கி வரத்து அதிகரித்தாலும், தேவை அதிகரிப்பு காரணமாக, ஒரே சீரான விலை நிலவும் வாய்ப்புள்ளது.
இவ்வாறு, தெரிவித்தனர்.