/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'மனசு': இன்னுயிர் காக்கும் 'மாமருந்து'
/
'மனசு': இன்னுயிர் காக்கும் 'மாமருந்து'
ADDED : டிச 12, 2024 11:51 PM
ஒரே கல்லுாரியில், ஒரே வகுப்பில் படித்த இரு தோழியர், கடந்த 11ம் தேதி, அவிநாசி அடுத்த பழங்கரையில், ஒரே அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். ஆழமான நட்புடன் கூடிய இருவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
''தற்கொலை எண்ணத்தில் உள்ளவர்களை உடனடியாக மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் சமூகத்திற்கு இருக்கிறது'' என்கின்றனர் மன நல ஆலோசகர்கள்.
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மனநலப்பிரிவு பேராசிரியர் டாக்டர் சஞ்சய் கூறியதாவது:
அனைவருக்கும் தற்கொலை எண்ணம் வராது. 'நான் உங்களையெல்லாம் விட்டுப் பிரிந்து விடுவேன். தற்கொலை செய்து கொள்வேன்' என சொல்வோர் கூட தற்கொலைக்கு முயல மாட்டார்கள். குடும்பத்தினர், உறவினர், பரம்பரை வழியில் யாரேனும் ஒருவர் தற்கொலைக்கு முயன்றதை பார்த்திருப்பர் அல்லது தற்கொலை செய்து கொண்டு இறந்திருப்பர்.
அதன் தாக்கம் சிலருக்கு தொடர வாய்ப்புண்டு. பலருக்கும் வெளியே சொல்ல முடியாத கஷ்டம் இருக்கும். அதை ஜீரணித்து கடந்து சென்று விடுவது தான், வாழ்க்கை நெறி. அதைக் கற்றுத் தரவும், தற்கொலை எண்ணத்தில் உள்ளவர்களை அறிந்து கொள்ளவும், மனநல நல்லாதரவு மன்றம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்லுாரிகளில் 'மனசு' அமைப்பு
ஒவ்வொரு கல்லுாரியிலும் ஒரு மன நல துாதுவர், ஆண், பெண் இருபாலரை கொண்ட ஐந்து பேர் குழு 'மனசு' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் தங்கள் நண்பர்களுக்குள் ஒரு குழுவை உருவாக்கி கண்காணித்து, அவர்களது மனநிலையை அறிந்து கொள்கின்றனர். யாருடனும் தொடர்பில் இல்லாமல், தனிமையையே விரும்புபவர்கள், அதிகமாக எதிலும் ஆர்வம் காட்டாமல் உள்ளவர் செயல்பாடுகளை தெரிந்து கொள்கின்றனர்.
தேவையிருந்தால், உண்மையென தெரிய வந்தால், அவர்களுக்கு ஆலோசனை வழங்க, அறிவுரை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பள்ளி, கல்லுாரிகளிலும் மன நலத் துாதுவர், குழு அமைத்தால் எதிர்மறை எண்ணம் கொண்டிருப்போரை அதில் இருந்து மீட்டெடுக்க முடியும்; தற்கொலைகள் தடுக்கப்படும்.
பகிர்ந்தால் அலட்சியம் கூடாது
ஒருவர் தனது பிரச்னை அல்லது சிரமத்தை நண்பர், குடும்ப உறுப்பினர் அல்லது வேறு யாரேனும் ஒருவரிடம் பகிர்வர். அதைக் கேட்கும் நபர், அலட்சியப்படுத்தாமல், அவர்களை கேலி, கிண்டல் செய்யாமல், அவரைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் மனநல ஆலோசனைக்கு அழைத்து வந்து, உதவலாம்.
ஒருவர் தற்கொலை எண்ணத்தில் உள்ளார் என்பதை கண்டறிந்து விட்டால், அவர்களை கவுன்சிலிங், மருந்து, மாத்திரை மூலம் மீட்டு கொண்டு வந்து விடலாம். ஆனால், அந்த எண்ணத்தில் இருப்பவர் தானாகச் சொன்னால் தான் தெரிய வரும். இல்லையெனில், '104'க்கு அழைத்து பேசினால் அறிய முடியும். மற்ற வகையில் ஒருவரின் செயல்பாடுகளை வைத்து கண்டுபிடிப்பது சிரமம் தான். எண்ணம் போல் தான் வாழ்க்கை. ஆகையால், நல்ல எண்ணங்கள் ஒவ்வொருவரிடம் இருக்கிறதா என ஆராய வேண்டும்.
இவ்வாறு, டாக்டர் சஞ்சய் கூறினார்.
- நமது நிருபர் -