/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா
/
அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா
ADDED : நவ 19, 2025 04:36 AM
திருப்பூர்: ஸ்ரீதர்மசாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீ அய்யப்பன் பக்த ஜனசங்கம் சார்பில், திருப்பூர் அய்யப்பன் கோவில், 66வது மண்டல பூஜை விழா, டிச., 7ம் தேதி துவங்குகிறது.
திருப்பூர், காலேஜ் ரோடு. அய்யப்பன் கோவிலில், ஆண்டுதோறும் மண்டல பூஜை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு, டிச. 7ம் தேதி கொடியேற்றத்துடன் மண்டல பூஜை விழா துவங்குகிறது. மஹா கணபதி ேஹாமம், நவகலச அபிேஷகம், பகவதி சேவை, உற்சவ பலி பூஜை, மஹா விஷ்ணு பூஜை, தாயம்பகை மேளம், பள்ளிவேட்டை என, பல்வேறு பூஜைகள் நடக்க உள்ளன.
தினமும் மாலை, 7:00 மணிக்கு பறையெடுப்பு நிகழ்ச்சி நடக்க உள்ளது. பக்தர்கள், நெல், அரிசி, மலர்பொரி, புஷ்பம், அவல், நாணயம், தேங்காய், மஞ்சள், எள் ஆகியவற்றை நிறைபறையாக செலுத்தி, சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தலாம். மண்டல பூஜை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, அய்யப்ப சுவாமி ஆறாட்டு உற்சவம், பவானி கூடுதுறையில், டிச. 12ல் நடக்க உள்ளது. சபரிமலை பிரதம தந்திரி கண்டரு பிரம்ம ஸ்ரீமோகனரு தலைமையில், ஆறாட்டு விழா நடக்கும். தொடர்ந்து, மாலை, அய்யப்ப சுவாமி அலங்கரித்த ரதத்தில் திருவீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
திருப்பூர் அய்யப்பன் கோவில் மண்டல பூஜை என்றாலே, ஞாயிற்றுக்கிழமை தோறும் நடக்கும் அன்னதானம் பிரசித்தி பெற்றது; ஒவ்வொரு வாரமும், ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அறுசுவை உணவு விருந்து அளிக்கப்படுகிறது. அதன்படி, வரும், 23 ம் தேதி துவங்கி, ஒவ்வொரு ஞாயிறும் அன்னதானம் நடக்கும். டிச. 27 மற்றும் 2026 ஜன. 1ம் தேதி மற்றும் ஏழு ஞாயிற்றுக்கிழமை என, ஒன்பது நாட்கள் அன்னதானம் நடைபெற உள்ளது.
அய்யப்பன் கோவில் நிர்வாகக்குழு தலைவர் நாச்சிமுத்து, பொதுசெயலாளர் மணி, துணை தலைவர் மோகன்ராஜ், இணை செயலாளர் சிவக்குமார், பொருளாளர் முருகேசன் மற்றும் பலர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

