/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மங்கள கயிறு தயாரிப்பு தீவிரம்; ஆடி மாதம் துவங்கவுள்ளதால் விறுவிறு
/
மங்கள கயிறு தயாரிப்பு தீவிரம்; ஆடி மாதம் துவங்கவுள்ளதால் விறுவிறு
மங்கள கயிறு தயாரிப்பு தீவிரம்; ஆடி மாதம் துவங்கவுள்ளதால் விறுவிறு
மங்கள கயிறு தயாரிப்பு தீவிரம்; ஆடி மாதம் துவங்கவுள்ளதால் விறுவிறு
ADDED : ஜூலை 08, 2025 08:54 PM

உடுமலை; ஆடி மாதம் துவங்க உள்ளதையொட்டி, உடுமலை சுற்றுப்பகுதியில் மங்கள கயிறு தயாரிப்பு தீவிரமடைந்துள்ளது.
உடுமலை சுற்றுப்பகுதியில் பெரியகோட்டை, வரதராஜபுரம், பூளவாடி உள்ளிட்ட பகுதிகளில், பாரம்பரியமாக மங்கள கயிறு தயாரிப்பு பல ஆண்டுகளாக நடக்கிறது. குறுகிய நாட்களில் ஆடி மாதம் துவங்க உள்ளதையொட்டி, இப்பகுதிகளில் கயிறு தயாரிக்கும் தொழில் தீவிரமடைந்துள்ளது.
ஆடி மாதம் முழுவதுமே, அம்மன் கோவில்களில் விசேஷமான நாட்களாக சிறப்பு வழிபாடுகள் தொடர்ந்து நடக்கிறது. மேலும், பக்தர்கள் திருமண வரம் வேண்டியும், திருமணமானவர்கள் பல வேண்டுதல்களை வைத்தும், மங்கள பொருட்களை பிரசாதமாக கோவில்களில் வழங்குகின்றனர்.
மேலும், ஆடி மாதம் வரலட்சுமி விரத சிறப்பு பூஜையும் நடக்கிறது. இதனால் ஆடி மாதம் மங்கள கயிறு தேவை கூடுதலாகவே உள்ளது.
உடுமலை சுற்றுப்பகுதி காட்டன் மில்களிலிருந்து, நுால்கள் பெறப்பட்டு அவை 'சைஸ்' வாரியாக பிரிக்கப்பட்டு, சாயமேற்றப்படுகிறது. அதன்பின், 150 கயிறுகள் ஒரு கட்டாக பிரிக்கப்பட்டு தயார்படுத்தப்படுகிறது.
ஒரு நாளில் குறைந்தபட்சம் சாதாரண நாட்களில், 10 கட்டுகள் வரை தயாரிக்கின்றனர். தற்போது ஆடி மாதமாக இருப்பதால், 20 கட்டுகள் வரை தயார்படுத்துகின்றனர்.
இப்பகுதிகளில் தயாரிக்கப்படும் கயிறுகள், கோவை, தஞ்சாவூர் உட்பட மாநில அளவில் பல்வேறு மாவட்டங்களுக்கு 'ஏஜன்ட்'கள் வாயிலாக அனுப்பப்படுகிறது. மேலும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கும் செல்கிறது.
பாரம்பரியமாக மேற்கொள்கிறோம்
மங்கள கயிறு உற்பத்தியாளர்கள் கூறியதாவது:
ஆடி மாதம் முழுவதும், இந்த கயிறுகளின் உற்பத்தி அதிகமாக இருக்கும். 100 கயிறுகள் 90 ரூபாய் முதல் 130 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. சீசன் போது மட்டுமே லாபம் பெற முடிகிறது.
நிலையான வருமானம் என எதுவும் இல்லை. அதற்கான மூலப்பொருள் பெறுவது, ஆட்களுக்கான சம்பளம் வழங்குவது என அனைத்தும் போக மிக குறைந்த தொகை மட்டுமே லாபம் பெற முடியும்.
இருப்பினும், பாரம்பரியமாக இந்த தொழில் செய்யப்படுவதால், தொடர்ந்து கைவிடாமல் இருக்கிறோம்.
இவ்வாறு கூறினர்.