/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிட்டி போலீஸ் எல்லையுடன் மங்கலம் இணைகிறது!
/
சிட்டி போலீஸ் எல்லையுடன் மங்கலம் இணைகிறது!
ADDED : டிச 03, 2024 11:45 PM
திருப்பூர்; திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனரகம் கடந்த, 2013ம் ஆண்டு உதயமானது. எட்டு சட்டம்-ஒழுங்கு, தலா இரு போக்குவரத்து, மகளிர் ஸ்டேஷன், மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் உள்ளிட்ட பிரிவுகள் செயல்பட்டு வருகிறது.
மற்ற மாநகர போலீஸ் கமிஷனரகத்துடன் ஒப்பிடுகையில், திருப்பூர் சிறிய நகரமே. இதனால், மாநகர - மாவட்ட பகுதியில் உள்ள சில ஸ்டேஷன்களை பிரித்து, எல்லைகளை விரிவாக்கம் செய்து இணைக்க என, பல கருத்துருக்கள் அவ்வப்போது போலீஸ் அதிகாரிகளால் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
கடந்த, 2023ம் ஆண்டு ஏப்., மாதம் சட்டசபையில் நடந்த போலீஸ்துறை மானிய கோரிக்கையில், திருப்பூர் மாவட்ட போலீசின் கீழ் உள்ள, மங்கலம் போலீஸ் ஸ்டேஷனை, திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனரகத்துடன் இணைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். மங்கலம் ஸ்டேஷன் கீழ், மங்கலம், இடுவாய், பூமலுார், 63 வேலம்பாளையம், இச்சிபட்டி என, ஐந்து ஊராட்சி, சாமளாபுரம் பேரூராட்சி இடம் பெற்றுள்ளன. இவற்றில், ஆறு தாய் கிராமங்கள், 34 குக்கிராமங்கள் உள்ளன.
இதுகுறித்து போலீஸ் உயரதிகாரிகள் கூறியதாவது:
மாநகர போலீசில், மங்கலம் போலீஸ் ஸ்டேஷன் இணைவது தொடர்பாக அரசாணை வெளியானது. தற்போது, அந்த ஸ்டேஷனில் உள்ள போலீசாரை வேறு ஸ்டேஷன்களுக்கு இடமாற்றம் செய்யவும், விருப்பமுள்ளவர்கள் மாநகருக்கு மாற்றவும் எஸ்.பி., உத்தரவிட்டார்.
இணைப்புக்கான பணி முழு வீச்சில் நடக்கிறது. ஒன்றிரண்டு நாட்களுக்குள் முழுமையாக அந்த ஸ்டேஷன் மாநகருடன் சேர்ந்து செயல்பட உள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினார்.