/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பல்லாங்குழிகள்... கழிவுநீர் 'குளங்கள்' தவிக்கும் 32வது வார்டு
/
பல்லாங்குழிகள்... கழிவுநீர் 'குளங்கள்' தவிக்கும் 32வது வார்டு
பல்லாங்குழிகள்... கழிவுநீர் 'குளங்கள்' தவிக்கும் 32வது வார்டு
பல்லாங்குழிகள்... கழிவுநீர் 'குளங்கள்' தவிக்கும் 32வது வார்டு
ADDED : ஏப் 11, 2025 11:11 PM

'டாலர் சிட்டி' என்ற பெயர் பெற்றிருந்தாலும் கூட, திருப்பூரில், அடிப்படை கட்டமைப்புகள் மோசமாகவே தொடர்கிறது. மோசமான ரோடுகள், ஒளிராத தெருவிளக்குகள், ஒழுங்கற்ற திடக்கழிவு மேலாண்மை என, எங்கும் பிரச்னைமயமாக திகழ்கிறது. மாநகராட்சியில் உள்ள, 60 வார்டுகளில் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை அலசும் பகுதி தான் இது.
மாநகராட்சி 32வது வார்டிலுள்ள பிரச்னைகள் குறித்து பார்க்கலாம்.
ஊத்துக்குளி ஒற்றைக்கண் பாலத்தில் ஆரம்பித்தால், ஆண்டுக்கணக்காக மழைக்காலங்களில் தேங்கி நிற்கும் மழை நீருக்கு இன்னும் விடிவுகாலம் பிறக்கவில்லை. பாலத்தின் அடியில் வாகன ஓட்டிகள், வாகனங்களை பதம் பார்க்கும் வகையில் தான் குண்டும் குழியுமாக உள்ளது.
அங்கிருந்து ஆரம்பித்தால், காசி விஸ்வநாதர் கோவில் அருகே தண்டவாளத்தையொட்டி செல்லும் ஓரங்களில் பிளாஸ்டிக் கழிவு உள்ளிட்ட குப்பைகள் நிறைந்து காணப்படுகின்றன.
பல்லாங்குழி சாலை
புது ராமகிருஷ்ணாபுரம், சூர்யா காலனி, கோல்டன் நகர் உள்ளிட்ட பகுதிகளில், தற்போது ரோடு 'பரவாயில்லை' ரகமாக உள்ளது. குடிநீர் குழாய் பதிப்பு, பாதாள சாக்கடை போன்ற பல பணிகளுக்கு தோண்டப்பட்ட ரோடு, பல்லாங்குழியாகத் தான் காட்சியளிக்கிறது.
உருவான 'குளங்கள்'
வார்டில் பாதாள சாக்கடை முழுமையாக விரிவுபடுத்தப்படாமல் பல வீதிகளில் விடுபட்டுள்ளன. தொழிலாளர் நிறைந்த பகுதிகளாக உள்ளதால் நெருக்கமாக ஏராளமான வீடுகள் காணப்படுகின்றன. சாக்கடை கால்வாய் முறையாக துார்வாரப்படாமல், பல இடங்களில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. தனியார் இடங்களில் தாழ்வான இடங்களில் மழைநீர் 'குளங்கள்' காணப்படுகின்றன. சிறிது நேரம் மழை பெய்தால் கூட தேங்கி நின்று விடுகிறது.
எங்கும் குப்பைமயம்
வார்டுக்குள் எந்த பகுதியில் சென்றாலும், பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடக்கிறது. சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் இத்தகைய கழிவுகள், படர்ந்து விரிந்துள்ளன. குடியிருப்பு பகுதியில் முறையாக குப்பை அள்ளப்படாமல் பெயரளவில் தான் நடக்கிறது. சாக்கடை கால்வாயில் இருந்து எடுக்கப்படும் கழிவு ரோட்டோரம் அகற்றப்படாமல் உள்ளது.
செயல்படாத திட்டம்
தங்க மாரியம்மன் கோவில் அருகே சில வார்டுகளில் இருந்து வரும் கழிவு நீர் தனியார் இடத்தில் தேங்கி நிற்பது பல ஆண்டுகளாக தொடர்கிறது. இதற்கு தீர்வு ஏற்படுத்த மின்மோட்டார் பொருத்திகழிவு நீரை வெளியேற்றும் வகையில் அமைத்தனர்.
இது முறையாக செயல்படுகிறதா என்றால் பெரிய கேள்விக்குறி தான். முழுமையாக தீர்வு ஏற்படுத்தப்படாமல் உள்ளது.
மழைக்கால 'தனித்தீவு'
பாளையக்காட்டில் இருந்து கோல்டன் நகருக்கு செல்லும் இடத்தில் உள்ள ரயில்வே மேம்பாலம் மழை காலங்களில் தனித்து விடப்பட்ட தீவாக இந்த பகுதி மாறி விடுகிறது. வாகனங்கள் செல்ல முடிவதில்லை.
திறந்தவெளி 'பார்'கள்
கோல்டன் நகர் பிரதான பகுதியில் 'இளசு'களின் 'அட்ராசிட்டி' அதிகமாக உள்ளது. அங்குள்ள மதுக்கடையில் பாட்டில்களை வாங்கி பொது இடத்தில் அருந்துகின்றனர். வார இறுதி நாட்களில் போதையில் தகராறு அடிக்கடி நடக்கிறது. கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் புழக்கம் அதிகமாக உள்ளது. போலீசாரின் கண்காணிப்பு மந்தமாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
எஸ்.ஆர்.சி., மில் ரயில்வே மேம்பாலம் வார்டுக்குள் வருகிறது. முறையாக திட்டமிடப்படாமல் கட்டிய பாலத்தால் பெரிய பயன் கிடையாது. பெரியளவில் பயன்படுத்தாமல் இருக்கின்றனர். இரவு நேரங்களில் பாலத்தின் மீது நின்று மது அருந்துகின்றனர்.
கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு
ரூ.14 கோடி நிதி தேவை
மாநகராட்சி 32வது வார்டு கவுன்சிலர் தம்பி கோவிந்தராஜ், இரண்டாவது மண்டலத் தலைவரும்கூட.
அவர் கூறியதாவது:
சூர்யா காலனியில் இருந்து எஸ்.ஆர்.சி., மேம்பாலம் செல்லும் இடம் பாறைக்குழியாக இருந்து குப்பை கொட்டப்பட்ட இடம். அதனால், பிளாஸ்டிக் கழிவுகள் இருந்திருக்கும். வார்டுக்குள் குப்பை அகற்றப்பட்டு வருகிறது. தங்கமாரியம்மன் கோவில் அருகே தேங்கும் கழிவு நீரை அகற்ற மோட்டார் பயன்பாட்டில் உள்ளது. வெளியேற்ற இடம் இல்லாமல் உள்ளாமல் உள்ளது. 6, 18, 32 மற்றும் 19 என, நான்கு வார்டு கழிவு நீர் வரும். நிரந்தர தீர்வு ஏற்படுத்த சிறப்பு நிதி கேட்டுள்ளோம். 13 ஆண்டுகளாக பிரச்னை உள்ளது. 14 கோடி ரூபாய் கேட்டுள்ளோம். பல ஆண்டுகளாக உள்ள ரோடு பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒற்றைக்கண் சுரங்க பாலத்தில் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தம் விடப்பட்டு, பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளது. பாளையக்காட்டில் இருந்து கோல்டன் நகர் செல்லும் ரயில்வே மேம்பாலம் ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ளது.
மழை நீர் செல்வதற்காக தான் இது உள்ளது. மழைக்காலங்களில் தேங்கும் நீர் உடனடியாக நீர் வெளியேற்றப்படுகிறது. வார்டுக்குள் பிரதான மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்த முழு கவனம் செலுத்தப்படுகிறது.