/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பஸ் ஸ்டாண்டுக்குள் விரிவாகிறது 'சந்தை'
/
பஸ் ஸ்டாண்டுக்குள் விரிவாகிறது 'சந்தை'
ADDED : பிப் 16, 2024 01:43 AM

பல்லடம்;இடப்பற்றாக்குறை காரணமாக, வார சந்தை, பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் விரிவடைந்து வருகிறது.
பல்லடத்தில், தினசரி மார்க்கெட், உழவர் சந்தை, வணிக வளாகங்கள், வார சந்தை உள்ளிட்ட அனைத்தும் ஒருங்கிணைந்த பகுதியாக என்.ஜி.ஆர்., ரோடு உள்ளது.
பல்லடம் வட்டாரத்துக்கு உட்பட்ட பொதுமக்கள், அத்தியாவசிய பொருட்கள் வாங்க அதிக அளவில் இங்கு கூடுகின்றனர். குறிப்பாக, வார சந்தை நடைபெறும் திங்கட்கிழமை நாட்களில், வட்டாரம் முழுவதும் உள்ள எண்ணற்ற தொழிலாளர்கள், பொதுமக்கள் வார சந்தைக்கு வருகை தருகின்றனர்.
இதன் காரணமாக, ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாட்களில், என்.ஜி.ஆர்., ரோடு திருவிழா போல் காட்சி அளிப்பது வழக்கம்.
வார சந்தைக்குள், ஒதுக்கீடு செய்யப்பட்ட கடைகள் மட்டுமின்றி, வழிநெடுக கடைகள் முளைத்துள்ளன. இடப் பற்றாக்குறை காரணமாக, கடைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் விரிவடைந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பல்லடம் பஸ் ஸ்டாண்டும் வார சந்தையாக விரிவடைந்து வருகிறது.
ஏற்கனவே, என்.ஜி.ஆர்., ரோட்டின் வழிநெடுக கடைகள் அமைக்கப் படுவதால், பார்க்கிங் வசதி கபளீகரம் செய்யப்பட்டு, கடுமையான வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
தற்போது, பஸ் ஸ்டாண்டும் வார சந்தையாக விரிவடைந்து வருவதால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. வார சந்தை நாட்களில், பஸ்கள் நிறுத்தப்படும்
'ரேக்'களில், ஆட்டோக்கள், டூவீலர்கள் நிறுத்தப்படுகின்றன. போலீசாரும் இதை கண்டுகொள்ளாததால், விபத்து அபாயமும் ஏற்பட்டு வருகிறது.
வார சந்தையில் கடைகளை முறைப்படுத்த நகராட்சி முன்வர வேண்டும். பஸ் ஸ்டாண்டுக்குள் வாகனங்கள் இடையூறாக நிறுத்தப்படுவதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.