/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'மார்க்கெட் கடை ஏலம்: இடைத்தரகருக்கு இடம் இல்லை'
/
'மார்க்கெட் கடை ஏலம்: இடைத்தரகருக்கு இடம் இல்லை'
ADDED : டிச 26, 2024 11:45 PM
திருப்பூர்; திருப்பூர், காமராஜ் ரோட்டில், மாநகராட்சிக்கு சொந்தமான தினசரி மார்க்கெட் வளாகம் உள்ளது. 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், இந்த வளாகம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதன் கட்டுமானப் பணிக்காக கடைகள், தற்காலிகமாக காட்டன் மார்க்கெட் வளாகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டன.
நேற்று இந்த வளாகத்தில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை மேயர் தினேஷ்குமார், கமிஷனர் ராமமூர்த்தி மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேயர் கூறியதாவது:
புதிய வளாகத்தில் உள்ள கடைகளுக்கு தனித்தனியாக மின் இணைப்புகள் பெற வேண்டியுள்ளது. வளாகத்தில் மின் பயன்பாட்டை குறைக்கும் விதமாக சோலார் பேனல் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. கடைகளில் காற்றோட்டம் ஏற்படுத்தும் வகையில் சில மாறுதல்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
வளாகத்திலிருந்து கழிவுநீர் வெளியேற கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. தேவையான குடிநீர் இணைப்புகள் வழங்க வேண்டியுள்ளது. அவ்வகையில் கட்டுமானம் மற்றும் உட்கட்டமைப்பு பணிகள் முடிய இன்னும் ஒரு மாதம் ஆகும். இதுதவிர, கடைகளுக்கு வாடகை நிர்ணயம் செய்து, அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு பெற வேண்டும். இப்பணிகள் முடிந்து, டெண்டர் நடவடிக்கைகள் முறையாக அறிவித்து நடைபெறும்.
தற்போது மார்க்கெட் கடைகள் குறித்த பல வகை வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. வியாபாரிகள் பயனடையும் வகையில் மட்டுமே கடை ஏலம் நடைபெறும்; இடைத்தரகர்களுக்கு இடமில்லை. அரசாணை பெற்று முறைப்படி மட்டுமே நடைபெறும். மோசடி நபர்களிடம் யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.