ADDED : அக் 01, 2026 07:51 AM

அவிநாசி: அவிநாசி அருகே சேவூர், பாப்பாங்குளம் பிரிவு பஸ் ஸ்டாப் பகுதியில் நுால் மில் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நுால் மற்றும் பொருட்கள் எரிந்து சேதமானது.
அனுப்பர்பாளையத்தை சேர்ந்த கவுதம் சந்த் ஜெயந்த், 55, சேவூர் அருகே ஸ்பின்னிங் மில் நடத்தி வருகிறார். நேற்று மதியம் மில்லில் உள்ள நுால் குடோனின் ஒரு பகுதியில் வெல்டிங் பணி நடைபெற்றது.
அப்போது ஏற்பட்ட தீப்பொறி, குடோனின் மறுபுறம் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நுால் பண்டல்கள் மீது விழுந்ததில் தீப்பிடித்தது.
இதைப் பார்த்த ஊழியர்கள், உடனடியாக அவிநாசி தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து ஊழியர்களும் தீயை அணைக்க முயன்றனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீர் லாரிகள் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீ வேகமாக பரவியதால், அதை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. தீயின் வெப்பம் காரணமாக கான்கிரீட் கட்டடத்தின் சில பகுதிகளில் வெடிப்பு ஏற்பட்டு, கட்டுமானப் பகுதிகள் ஆங்காங்கே இடிந்து விழத் தொடங்கின.
ஆறு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு, நேற்று மாலை 6:30 மணியளவில் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நுால் மற்றும் குடோன் கட்டடம் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது.
சேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
