/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கணிதம் 'கசந்தது': வணிகவியல் 'வசீகரித்தது'
/
கணிதம் 'கசந்தது': வணிகவியல் 'வசீகரித்தது'
ADDED : மார் 25, 2025 07:00 AM

திருப்பூர்; பிளஸ் 1 மாணவ, மாணவியருக்கான, கணிதம், வணிகவியல் உள்ளிட்ட எட்டு தேர்வுகள் நேற்று நடந்தது.
திருப்பூர், மாவட்டத்தில் கணிதத்தேர்வை எழுத, 14 ஆயிரத்து, 352 பேர் விண்ணப்பித்திருந்தனர். 14 ஆயிரத்து, 260 பேர் தேர்வெழுதினர்; 92 பேர் ஆப்சென்ட். வணிகவியல் தேர்வை, 11 ஆயிரத்து, 318 பேர் எழுத வேண்டும். 11 ஆயிரத்து, 67 பேர் தேர்வெழுதினர். 251 பேர் தேர்வெழுதவில்லை.
கணிதம் தேர்வெழுதிய மாணவியர் கூறியதாவது:
நந்திதா: ஒரு மதிப்பெண் அனைத்தும் எளிதில் விடையெழுதும் வகையில், பாடங்களுக்கு பின்புறம் இருந்து அப்படியே கேட்கப்பட்டிருந்தது. இரண்டு மதிப்பெண்ணில் எதிர்பார்த்த கேள்விகள் வந்திருந்தது. கட்டாய வினாவுக்கும் விடை அளிக்க முடிந்தது. முந்தைய பொதுத்தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகள் மீண்டும் ஐந்து மதிப்பெண் வினாக்களில் வந்திருந்தது.
சக்திவேல்: ஐந்து மதிப்பெண்ணில் முழு கவனம் செலுத்தியிருந்தேன். அதற்கேற்ப எளிமையான வினாக்கள் கேட்கப்பட்டிருந்தது. ஆனால், 'எய்தர் ஆர் சாய்ஸ்' ஆக எழுத வேண்டும் என்பதால், கேள்விக்கு விடை தெரிந்தும் தவிர்க்க வேண்டியதாயிற்று. நல்ல மதிப்பெண் வரும்.
தேர்ச்சி சதவீதம் உயர வாய்ப்பு
பொல்லிக்காளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, ஆசிரியர் ராஜேஸ்வரி கூறுகையில், ''ஒரு மதிப்பெண் முழு மதிப்பெண் பெற்று விடுவர். ஏற்கனவே பொதுத்தேர்வுகளில் கேட்டிருந்த முக்கியமான கேள்விகள் மீண்டும் வந்திருந்ததால், எளிதில் விடை எழுதியிருக்க முடியும். மூன்று மதிப்பெண்ணில் கட்டாய வினா யோசித்து விடையளிக்கும் வகையில் இருந்தது.
முதல் பாடப்பிரிவில் உள்ள கேள்வி, கடைசி கேள்வியாக ஐந்து மதிப்பெண்ணில் வந்திருந்தது. கணிதம், மிக எளிமை என்று கூறி விட முடியாது. தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும். அதே நேரம், அனைத்து பாடங்களையும் முழுமையாக படித்து தேர்வெழுதியிருப்பவர், சென்டம் பெறவும் வாய்ப்புள்ளது,'' என்றார்.
வணிகவியல் தேர்வெழுதிய மாணவர்கள் கூறியதாவது:
தன்யா: ஒரு மதிப்பெண் அனைத்து பாடங்களுக்கு பின்புறம் இருந்து அப்படியே வந்திருந்தது. சிரமமின்றி எளிதில் பதில் எழுத முடிந்தது. கட்டாய வினா ஏற்கனவே கேட்கப்பட்டது தான். எதிர்பார்த்துச் சென்ற முக்கிய வினாக்கள் வந்திருந்தது. கூடுதல் மதிப்பெண் கிடைக்கும்.
ருத்ரமூர்த்தி: அனைத்து கேள்விகளும் எளிமையாக இருந்தது. வினாத்தாளை படித்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. நிறுத்தி, நிதானமாக முழுமையாக விடை எழுதினேன். வணிகவியல் அதிக மதிப்பெண்களை பெற முடியும். ஒரு மதிப்பெண்ணில் முழு மதிப்பெண் கிடைக்கும்.
நுாற்றுக்கு நுாறு வாங்கலாம்...
திருப்பூர், கே.எஸ்.சி., அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கலையரசி கூறுகையில், 'ஒரு மதிப்பெண் ஒரு கேள்வி மட்டும் நேரடியாக கேட்கப்பட்டிருந்தது. அதற்கும் விடை எழுதியிருக்க முடியும். இரண்டு, மூன்று மதிப்பெண்ணில், சிறிய அளவிலான கேள்விகள் தான், எளிதில் விடை எழுதும் வகையில் இருந்தது. முக்கிய வினாக்கள் வரவில்லை.
ஆனால், எளிதில் விடையெழுதி முடிக்கும் வகையிலான கேள்விகள் வந்திருந்தது. வணிகவியலில் தேர்ச்சி சதவீதம் அதிகமாகும்; இம்முறை சென்டம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது,' என்றார்.
கடந்த, 5 ம் தேதி பிளஸ் 1 தேர்வு துவங்கியது; வரும், 27ம் தேதி வேதியியல், கணக்குபதிவியல், புவியியல் தேர்வுகளுடன், பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிகிறது.