/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருவருள் துணை செய்யும் ஆன்மிக பெரியோர் அருளாசி
/
திருவருள் துணை செய்யும் ஆன்மிக பெரியோர் அருளாசி
ADDED : ஏப் 12, 2025 11:21 PM
இறை உணர்வு பெருகட்டும்
தமிழ்ப் புத்தாண்டில் மக்களிடம் தன்னம்பிக்கை மற்றும் அன்பு, ஒற்றுமை, ஒத்துழைப்பு ஆகியவை பெருகி, அவரவர் கோட்பாடுகளுடன், அவரவர் பணிகளை தடையின்றி நிறைவேற்றும் ஆண்டாக அமையும். குழப்பமற்ற, தெளிவுடன், இறை உணர்வுடன் வாழ்ந்தால், எவ்வித தீமைகளும் நம்மை நெருங்காது. மாறாக, இறை உணர்வு இல்லாதவர், அனைத்து தொந்தரவுகளுக்கும் ஆட்பட நேரிடும். மனிதனாக பிறந்தவர், நற்சிந்தனைகளை பெருந்துணையாக கொண்டு, சிறப்புடன் வாழ வாழ்த்தி ஆசிர்வதிக்கிறோம்.
- ராஜசரவண மாணிக்கவாசக சுவாமி
கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீனம்
நல்லதே நடக்கட்டும்
தமிழ்புத்தாண்டு, அனைவருக்கும் சிறப்பாக அமைய, திருவருள் துணை செய்யும். புத்தாண்டு தினத்தில், அனைவரும் புனித நீராடி, மங்களகரமான கண்ணாடி முன், முக்கனி, குலதெய்வ படங்கள், மலர்களை வைத்தும், நம்மிடம் உள்ள செல்வங்களை வைத்து வழிபட வேண்டும்; பெற்றோரிடம் ஆசி பெற வேண்டும். சித்திரை வழிபாடு செய்யும் குடும்பங்கள் ஒற்றுமையாக இருக்கும். இந்தாண்டு, நல்ல மாற்றங்கள் வரும். நல்லமழை பெய்யும்; குடும்ப ஒற்றுமை மேம்படும். குலதெய்வ வழிபாடு சிறப்பாக நடக்க வாய்ப்புள்ளது. விசுவாவசு வருடத்தில், மனக்கவலைகளை மறந்து, இறைவழிபாடு செய்து, ஒற்றுமையாகவும், மகிழ்ச்சியாகவும், நல்ல ஆரோக்கியத்துடனும் நலமுடன் வாழ வாழ்த்தி ஆசிர்வதிக்கிறோம்.
- ஸ்ரீநடராஜ சுவாமிகுருகுல வேதபாடசாலை முதல்வர், கூனம்பட்டி.
ஒற்றுமை ஓங்கட்டும்
விசுவாவசு ஆண்டில், எங்கும் மங்கலம் உண்டாகட்டும்; மகிழ்ச்சி பொங்கட்டும், சித்திரை கனியிலே உவகை, அன்பு உரக்கப் பெருகட்டும். நலம்பல சேரட்டும், நட்பு மலரட்டும்; தேனீயை போல் சேமிப்பு பெருகட்டும்; குடும்ப உறவுகளிடையே ஒற்றுமை ஓங்கட்டும். அன்பும், ஆற்றலும் பெருக வேண்டும்; பகை மறைய வேண்டும். தொழில் வளம் பெருகி, பாரதம் செழிக்க வேண்டும். நலிந்தவர் நலம் பெற வேண்டும்; உழைப்பவர்கள் உயர வேண்டும். அனைத்து மக்களின் வாழ்வும் சிறக்கட்டும், அன்னையின் அருள், அனைத்து உயிர்களுக்கும் கிடைக்கட்டும்.
- ஸ்ரீபஞ்சலிங்கேஸ்வர சுவாமி,
கோவை காமாட்சிபுரி ஆதீனம்
எல்லாம் சிறக்கட்டும்
விசுவாவசு தமிழ்ப்புத்தாண்டு துவங்க இருக்கிறது; தமிழ்ப்புத்தாண்டு, மிகப்பெரிய நம்பிக்கையையும், வாழ்க்கையையும், குழந்தைகளுக்கு கல்வியையும் வழங்கும் ஆண்டாக அமையும். மழை வளம் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபார வளம், குறைவின்றி சிறப்பாக நடக்கும். தமிழ் புத்தாண்டை வரவேற்போம். குடும்பத்தில், வீடு கட்டுதல், கல்வி, வேலை வாய்ப்பு, திருமணம், குழந்தை பாக்கியம் என அனைத்து நன்மைகளும் தடையின்றி நடக்கும். அனைவருக்கும் எல்லா நலன்களும், செல்வங்களும் சிறப்பாக கிடைக்க திருவருளும், குருவருளும் துணை நிற்கட்டும்.
- சுந்தர்ராஜ சுவாமி
திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி திருமடம்

