/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அற்புதம் பல நிகழ்த்திய ஈசனிடம் பெறுவோம் ஆசி!
/
அற்புதம் பல நிகழ்த்திய ஈசனிடம் பெறுவோம் ஆசி!
ADDED : ஜன 29, 2024 11:42 PM

அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலின் சிறப்பு குறித்து, பெங்களூரு ஸ்ரீகுருகுல வேதாகம பாடசாலை முதல்வர் சுந்தரமூர்த்தி சிவாச்சார்யார் கூறியதாவது:
அவிநாசியில் எழுந் தருளியுள்ள பெருங்கருணை நாயகி உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், கொங்கு ஏழு சிவாலயங்களில் சிறப்பிடம் பெற்ற ஸ்தலம். இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. புராணங்களிலும், திருமுறைகளிலும் இந்த ஸ்தலம் இடம் பெற்றுள்ளது.
கருணையும் அருளும் வழங்கும் பெருங் கருணை நாயகி இந்த ஸ்தலத்தில் சிவனின் வலப்புறத்தில் அமர்ந்து அருள பாலிக்கிறார். ஸ்தல விருட்சமாக பாதிரி மரம் உள்ளது. இக்கோவிலில் சிவபெருமானையும், அம்பாளையும் வேண்டி, பிரார்த்தித்து பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறி நல்ல வண்ணம் வாழ்கின்றனர்.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் பதிகம் பாடி முதலை விழுங்கிய சிறுவனை மீட்ட புராண நிகழ்வு நடைபெற்ற சிறப்பு மிக்க இடம். பல்வேறு அரசர்களும் திருப்பணியும், புனருத்தாரணமும் செய்து சிறப்பித்துள்ளனர்.
இக்கோவிலின் கும்பா பிேஷகத்தில் பங்கேற்பது மிகவும் பாக்கியமானது. இதற்கு முன், 1980, 1993 மற்றும் 2008 ஆகிய ஆண்டுகளில் நடந்த கும்பாபிேஷகத்தில் பங்கேற்கும் வாய்ப்பை பெருமான் அருளினார்.
தற்போதும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
அவிநாசி கோவிலுக்கும் வாரணாசியிலுள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. பஞ்சமூர்த்திகளுக்கு தனிச்சிறப்பாக வழிபாடுகள் நடக்கிறது. மண்டபங்கள் அனைத்தும் சிறப்பான முறையில் அமைந்துள்ளன.
தேர்த்திருவிழா ஆண்டுதோறும், 13 நாள் மிகச்சிறப்பான முறையில் நடைபெறும். தமிழக அளவிலும், கொங்கு ஸ்தலங்களில் உயரமும், அழகும் அதிகம் அமைந்த அற்புதமானதேர் இக்கோவிலில் உள்ளது.
காசியுடன் தொடர்பு
திருப்புக்கொளியூர் என பாடப்பட்ட ஸ்தலம் இது. பல்வேறு முனிவர்கள் வணங்கி முக்தி பெற்றுள்ளனர். வசிஷ்டர் உள்ளிட்ட பல ரிஷிகளும் இங்கு வழிபாடு நடத்தியுள்ளனர். பதஞ்சலி முனிவர் காசியில் விட்ட தனது தண்டத்தை இந்த ஸ்தலத்தில் பெற்றார் என்று புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது போல் அவிநாசிக்கும் காசிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
இக்கோவிலுக்குள் சென்று வந்தாலே அற்புதமான ஆன்மிக உணர்வைப் பெறலாம். 1980ல், ராஜகோபுரம் அமைத்து கும்பாபிேஷகம் நடந்தது. தற்போது அனைத்து கோபுரங்களும், சன்னதிகளும், தரைத்தளமும் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிேஷக விழா, 24ம் தேதி, விக்னேஸ்வரர் வழிபாட்டுடன் துவங்கியது.
மிகவும் அற்புதமான முறையில் யாக சாலை அமைக்கப்பட்டு, பல்வேறு தெய்வங்களுக்கும், குண்டங்கள் அமைத்து, 300க்கும் மேற்பட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்துள்ள பாண்டித்தியம் பெற்ற சிவாச்சார்யார்கள் யாகசாலை பூஜைகளை நடத்துகின்றனர். தினமும் நான்கு வகை வேதங்கள், 28 ஆகமங்கள், 18 புராணங்கள், பன்னிரு திருமுறை பாராயணம் ஆகியன நடக்கிறது.
வேத பாட சாலை மாணவர்களும் பங்கேற்றுள்ளனர். பக்தகோடி பெருமக்கள் அனைவரும் கும்பாபிேஷகத்தின் அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்று எல்லாம்வல்ல அவிநாசியப்பரின் அருள் பெற்று உய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.