ADDED : மார் 29, 2025 05:52 AM

திருப்பூர் : மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில், மேயர் மற்றும் பா.ஜ., கவுன்சிலர் இடையே காரசாரமாக வாக்குவாதம் நடைபெற்றது.
திருப்பூர் மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில், பா.ஜ., கவுன்சிலர் குணேசகரன் பேசியதாவது:
பட்ஜெட் கூட்டத்தில் கடைசியாக எங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மூன்றாண்டுகளாக தெரு விளக்கு பிரச்னைகள் முடிவுக்கு வராமல் உள்ளது. எதனால் இந்த தாமதம் என்று தெரியாமல் எல்லா இடங்களிலும் குழப்பம் உள்ளது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பை தரம் பிரிப்பதில் மெத்தனம் நிலவுகிறது. கூடுதல் வாகனம் தேவை.
மண் கழிவுகள் அகற்ற தனி வாகனம் வேண்டும்.இந்த பட்ஜெட் புத்தக வடிவில் சிறப்பாக உள்ளது. வரி குறைப்பது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. மன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய தீர்மானம் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? வரியினங்களை குறைக்காமல் அதே அளவில் வைத்துக் கொண்டு உபரி பட்ஜெட் என்பதில் எந்த பயனும் இல்லை.
இவ்வாறு கூறி விட்டு, மற்றொரு பா.ஜ., கவுன்சிலர் தங்கராஜூடன் அவர் வெளியேறினார்.
அப்போது மேயர், 'நீங்கள் ஆரம்பத்திலேயே வெளி நடப்பு செய்வீர்கள் என எதிர்பார்த்தேன். அ.தி.மு.க.,வுடன் உங்கள் கள்ளக்கூட்டணி தெரிந்து விட்டது. தனித்தனியாக வெளி நடப்பு செய்தாலும் மீண்டும் ஒன்றாக சேர்ந்து உள்ளே வாருங்கள்' என்றார்.
'மேயர் இது போல் பேசுவது தவறு. இவ்வாறு பேசக் கூடாது,' என குணசேகரன் ஆவேசமாக கூறியவாறு, மேயருடன் வாக்குவாதம் செய்தவாறு வெளியே சென்றார்.
