/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குழந்தை திருமணத்தை தடுக்க நடவடிக்கை இனி தீவிரமாகும்! கிராமங்களில் களமிறங்கும் சமூகநலத்துறை
/
குழந்தை திருமணத்தை தடுக்க நடவடிக்கை இனி தீவிரமாகும்! கிராமங்களில் களமிறங்கும் சமூகநலத்துறை
குழந்தை திருமணத்தை தடுக்க நடவடிக்கை இனி தீவிரமாகும்! கிராமங்களில் களமிறங்கும் சமூகநலத்துறை
குழந்தை திருமணத்தை தடுக்க நடவடிக்கை இனி தீவிரமாகும்! கிராமங்களில் களமிறங்கும் சமூகநலத்துறை
ADDED : ஆக 05, 2024 06:31 AM

உடுமலை : திருப்பூர் மாவட்டத்தில், குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், சமூக நலத்துறை வாயிலாக கிராமங்களில், விழிப்புணர்வு ஏற்படுத்தவும், வழக்குப்பதிவு உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், குழந்தை திருமணங்களால் ஏற்படும் உடல்நல பிரச்னைகள் குறித்தும், அவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படுவது குறித்தும், அரசால் தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், கிராமங்களில் இன்னும் இப்பிரச்னை குறையவில்லை.
பெற்றோரின் கட்டாயத்தில் திருமணம் நடப்பது குறைவாகவும், வளர் இளம் பருவத்தில் ஏற்படும் மனக்குழப்பத்தினால், உரிய ஆலோசனை இல்லாமல், சிறிய வயதில் திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்தும் உள்ளது.
சமூக நலத்துறையின் கணக்கெடுப்பு வாயிலாக, குழந்தை திருமணம் மற்றும் 18 வயதுக்கு கீழ் குழந்தைக்கு தாயாகும் பெண்களின் எண்ணிக்கை அதிகமுள்ள மாவட்டங்களில், திருப்பூர் மாவட்டமும் இடம் பெற்றுள்ளது.
குறிப்பாக, உடுமலை சுற்றுவட்டாரத்தில், விழிப்புணர்வில் ஈடுபடும் அலுவலர்களே குழந்தை திருமணங்களின் எண்ணிக்கையை பார்த்து, அதிர்ச்சியடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
குழந்தை திருமணங்களை தடுக்க, புகார் தெரிவிப்பதற்கான இலவச எண் குறித்து விழிப்புணர்வு இருந்தாலும், சம்பந்தப்பட்ட நபர்கள் விரும்பி திருமணத்தை ஏற்றுக்கொள்வதால், புகார்கள் பதிவு செய்யப்படுவதில்லை.
அவர்கள் குழந்தை பேறுக்கென மருத்துவமனைகளை அணுகும் போது மட்டுமே இப்பிரச்னை கண்டறியப்படுகிறது. இவ்வாறு, இரண்டு மாதத்தில் மட்டுமே, மூன்றுக்கும் மேற்பட்ட புகார்கள், உடுமலை பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கிராமங்களில் விழிப்புணர்வு
சமூக நலத்துறை அலுவலர்கள் கூறியதாவது:
பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை சிறிதும் யோசிக்காமல், சிறிய வயதில் திருமணம் செய்துகொள்கின்றனர். இதுகுறித்து அலுவலர்கள் விசாரித்தாலும், சம்பந்தப்பட்ட நபர்கள் அவமரியாதையாகவும், மிரட்டும் வகையிலும் பேசுகின்றனர்.
கட்டாயத்தின் பெயரில் திருமணம் நடப்பதை சட்டத்தின் வாயிலாக தடுத்துவிடுகிறோம். ஆனால், பெற்றோரே விரும்பி குழந்தை திருமணம் செய்து வைப்பதை கட்டுப்படுத்துவதற்கான, நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இனி, குழந்தை திருமணம் செய்வோர் மீது கட்டாயம் வழக்கு பதிவு செய்யப்படும்; தொடர்ந்து கிராமங்களில் விழிப்புணர்வும் வழங்கப்படுகிறது.
இவ்வாறு கூறினர்.
குழந்தை திருமணம் தவறு என்பதை இன்னும் அழுத்தமாகவும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பெண்களுக்கு விழிப்புணர்வு அவசியமாகியுள்ளது. சில கிராமங்களில் உள்ளாட்சி பிரதிநிதிகளும் இப்பிரச்னை குறித்து புகார் தெரிவிப்பதில்லை.
சிறப்புக்குழு அமைக்கணும்
உளவியல் ஆலோசகர்கள் கூறியதாவது:
பெண்களின் உடல்நிலை ஒரு குழந்தை பேறு பெறுவதற்கு தயாராவதற்கும், குறிப்பிட்ட காலம் உள்ளது. ஆனால் குழந்தை திருமணம் நடப்பதால் அவர்களின் உடல்நிலை குறித்த எந்த விழிப்புணர்வும் இல்லாமல் குழந்தை பேறு வரை செல்கின்றனர்.
இதனால், ரத்தசோகை உட்பட பல நோய்களுக்கு மிக எளிதில் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். பிறக்கும் குழந்தைகளுக்கும் குறைபாடு ஏற்படுகிறது.
உளவியல் ரீதியாகவும், ஒரு குடும்பத்தை நடத்துவதற்கான மனநிலை வருவதற்கு முன்பே ஒரு குடும்ப கட்டமைப்புக்குள் தள்ளப்படுகின்றனர். உளவியல் ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் தீவிரமான விழிப்புணர்வு கிராமங்களில் தேவைப்படுகிறது.
இதற்கென சிறப்பு குழு அமைத்து, தொடர்ந்து கண்காணிப்பில் இருப்பதால் மட்டுமே இப்பிரச்னையை தவிர்க்க முடியும். பெண் குழந்தைகளுக்கு மட்டுமின்றி, அவர்களின் பெற்றோருக்கும் ஆலோசனை அளிக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.