/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மன அமைதிக்கு துணைபுரியும் தியானம்
/
மன அமைதிக்கு துணைபுரியும் தியானம்
ADDED : டிச 21, 2025 05:50 AM

திருப்பூர் : தியானத்தின் நன்மைகள் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் டிச. 21ல் உலக தியான தினம் கொண்டாடப்படுகிறது. தியானம் மனிதனுக்குள் என்னென்ன மாற்றங்களை செய்கிறது என்பது குறித்து, பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கூறியதாவது:
மனமற்ற நிலை
சுவாமிநாதன், ஈஷா யோகா மையம், திருப்பூர்:
நம் மனம் பலவிதமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு ஆசனத்தில் உட்கார்ந்து ஓடும் எண்ணங்களை கவனிக்க வேண்டும். ஒவ்வொரு எண்ணத்திற்கு நடுவில் சிறிய இடைவெளி வரும். அது சூன்யம், ஒன்றுமில்லா தன்மை, மனமற்ற நிலை எனப்படும். தொடர்ந்து பயிற்சி செய்ய, எண்ணங்களிலிருந்து விலகி, உடலுக்கும் மனதுக்குமான இடைவெளியை உணர்வோம். எண்ணங்களுக்கு எதிராக செயல்பட்டால் பாதிப்பு வரும். பிடித்த நினைவுகளுக்கு எதிராக கசப்பான சம்பவங்களை நினைத்துக் கொண்டிருக்க கவலை, துன்பம் பிறக்கும். அந்த எண்ணத்தை கட்டுப்படுத்தினால் துன்பம் இருக்காது; முழு சுதந்திரம் பெறுவோம். தியானத்தால் இது சாத்தியமாகும்.
அலைச்சுழல் குறையும்
ராஜேந்திரன், செயலாளர், மனவளக்கலை மன்ற அறக்கட்டளை, சாமுண்டிபுரம்:
உடல், உயிர், மனம் மூன்றையும் இணைத்து அமைதி பெறுவதற்கான செயல் முறையே தியானம். தன்னை, சமுதாயத்தை, இயற்கையை உள்ளதை உள்ளவாறு உணர்வதே தியானம். இன்றைய காலத்தில் மனம், எண்ணம் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருக்கிறது. நம் மன அலைச்சுழல் பீட்டா எனப்படும். 14 முதல் 40 வரை அலைச்சுழல் வேகம் கொண்ட பீட்டா, தியானம் செய்வதால் 7 முதல் 3 வரை குறையும்.
8 படிகளில் தலையாயது
பொதிகை சுந்தரேசன், ஹார்ட்புல்னெஸ் அமைப்பு:
பரபரப்பான வாழ்க்கை சூழலில் ஏற்படும் மனஅழுத்தத்தால் மனம் குழம்புகிறது. அதனால், பல உடல் உபாதைகள் ஏற்படுகிறது. தியானம் செய்வதால் மனம் குழம்பாமல் தெளிவாகும். வீட்டில் தனியாக தியானம் செய்ய முடியும் என்றாலும், அமைப்புகளில் சேர்ந்து முறையாக பயின்று, தியானம் செய்வது நல்லது. அப்போதுதான் முறையாக, சரியாக செய்வோம். பதஞ்சலி முனிவர் வடிவமைத்த யோகத்தின் எட்டு படிகளில் தியானம் தலையானது.
வழக்கமே வாழ்க்கை
ஸ்கை சுந்தர்ராஜ், துணைத்தலைவர், உலக சமுதாய சேவா சங்கம்:
'நமக்குள் தோன்றும் எண்ணங்கள் செயலாகவும், செயல் பழக்கமாகவும், பழக்கம் வழக்கமாகவும், வழக்கம் வாழ்க்கையாகவும் மாறுகிறது என்று எங்கள் குருநாதர், அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி கூறுவார். நமது வாழ்க்கை மாறுவதற்கு, எல்லா நாட்களிலும் தியானம் செய்வது அவசியம். உலக தியான தினமாகிய இன்று அதற்கான முயற்சியை துவங்குவோம்'.
மன நிம்மதி பெறலாம்
ஷகிலா பர்வீன், கல்விக்குழும செயலாளர், திருப்பூர்:
பரபரப்பான வாழ்க்கைச் சூழலில், அனைத்து தரப்பு மக்களுக்கும், குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு தியானப் பயிற்சி அவசியம். நான் நேரடியாக உணர்ந்தேன். மன அமைதியும், நிம்மதியும் தியானத்தால் பெற முடியும். பொறுமையான மனம் இருந்தால் உடல் ஒத்துழைக்கும். மனமும் உடலும் வலிமை பெறும். உலக தியான தினத்தில், அனைவரும் தியானப் பயிற்சியைத் தொடங்கி, தொடர்ந்து அதில் ஈடுபட வேண்டும்.
இன்று(டிச. 21) உலக தியான தினம்.
இன்று ஒரே நேரத்தில் 20 லட்சம் பேர் தியானம்
'தியானத்தின் வாயிலாக, நாம் கவலையிலிருந்து விடுபடுகிறோம். நமது குடும்பங்கள் ஒன்றிணைகின்றன. நமது அலுவலகச் சூழல்கள் மாறுகின்றன. தியானத்தின் வாயிலாக, நாம் நிம்மதியாகவும், அமைதியாகவும் வாழ முடியும்' என்று கூறுகிறார் இந்த அமைப்பின் உலக வழிகாட்டி பூஜ்யஸ்ரீ தாஜி.
'உலக தியான தினத்தையொட்டி, ஹார்ட்புல்னெஸ் அமைப்பு 20 லட்சம் பேர் இணையும் வகையில், மாபெரும் உலகளாவிய தியான நிகழ்ச்சியை நடத்துகிறது. குடும்பத்துடன் பங்கேற்க, திருப்பூர் மக்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். இந்நிகழ்ச்சி மட்டுமின்றி, தொடர்ந்து தியானப் பயிற்சியை மேற்கொள்ளும் வகையில், உதவ, எங்கள் மையங்களில் பயிற்சியாளர்கள் தயாராக உள்ளனர். மன மகிழ்ச்சியுடன் நிம்மதியையும், அமைதியையும் தருவதில் தியானங்களுக்கு இணையாக எதுவுமே இல்லை.
ஹர்ஷ வர்தன் குப்தா, திருப்பூர் மைய ஒருங்கிணைப்பாளர், ஹார்ட்புல்னெஸ் அமைப்பு.

