/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருவிழாவுக்காக மெகா பேனர்கள்; காத்திருக்கும் விபரீதம்
/
திருவிழாவுக்காக மெகா பேனர்கள்; காத்திருக்கும் விபரீதம்
திருவிழாவுக்காக மெகா பேனர்கள்; காத்திருக்கும் விபரீதம்
திருவிழாவுக்காக மெகா பேனர்கள்; காத்திருக்கும் விபரீதம்
ADDED : பிப் 23, 2024 12:11 AM

திருப்பூர்;திருமுருகன்பூண்டி, திருமுருகநாத சுவாமி கோவில் திருவிழாவையொட்டி, அரசியல் கட்சியினர் உட்பட பல்வேறு அமைப்பினர் சார்பில், 70க்கும் மேற்பட்ட பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இது விபரீதத்துக்கு வித்திடும் வகையில் அமைந்தும், அதிகாரிகள் 'அமைதி' காக்கின்றனர்.
சாலையோரம் உள்ளிட்ட பொது இடங்களில் பேனர், தட்டி வைக்க, பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சம்மந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்தினர், நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் போலீசாரிடம் அனுமதி பெற்று, அவர்கள் அனுமதி வழங்கும் இடத்தில் மட்டும் தான், பேனர், தட்டி வைக்க வேண்டும். தற்போது, திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில் தேர்த் திருவிழா நடந்து வருகிறது.
இதையொட்டி, அப்பகுதியில் உள்ள நெடுஞ்சாலை, கோவில் வளாகம் மற்றும் சிக்னல் உள்ள இடங்களில், அவற்றை மறைத்து, 70க்கும் மேற்பட்ட 'மெகா' பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள், விபரீதத்துக்கு வித்திடும் வகையில் இருப்பதாக புகார் எழுந்திருக்கிறது.
வியாபாரிகள் கூறுகையில், ''கடைகளை மறைத்து வைக்கப்பட்டுள்ள 'பேனர்'களால் வியாபாரம் பாதிக்கும்; நஷ்டம் ஏற்படும். பலத்த காற்று வீசும் போது, 'பேனர்' விழுவதற்கும் வாய்ப்புண்டு.
பேனர் வைக்க போலீசார் மற்றும் நகராட்சியிடம் அனுமதி பெற்றதாகவும் தெரியவில்லை. அப்படி அனுமதி பெற்றிருந்தால், மக்களுக்கு இடையூறாக 'பேனர்' வைக்க, அதிகாரிகள் அனுமதி வழங்கியிருக்க மாட்டார்கள்.
பேனர்களை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வியாபாரிகள், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத இடத்தில் அவற்றை வைத்துக் கொள்ள அறிவுறுத்த வேண்டும்'' என்றனர்.