/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மகாலட்சுமி நகரில் 'மெகா' பிரச்னைகள்
/
மகாலட்சுமி நகரில் 'மெகா' பிரச்னைகள்
ADDED : ஜூலை 20, 2025 11:18 PM

பல்லடம்; பல்லடம் அடுத்த ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி, மகாலட்சுமி நகரில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளை சார்ந்து, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு காணப்படும் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என, இப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
கடந்த 25 ஆண்டுகள் முன், சொற்ப அளவிலான குடியிருப்புகள் மட்டுமே இருந்த இப்பகுதியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள், கடைகள், வணிக வளாகங்கள், அரசு தனியார் பள்ளிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் என, பரபரப்பான பகுதியாக மகாலட்சுமி நகர் உள்ளது. தினசரி, நுாற்றுக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மற்றும் பனியன் கம்பெனி வாகனங்கள் இப்பகுதிக்கு வந்து செல்கின்றன. இங்குள்ள, 23 வீதிகளிலும் ஆக்கிரமிப்புகள் காரணமாக, ரோட்டை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
அனுமதியற்ற கட்டடங்கள், மேற்கூரைகள், தள்ளுவண்டிகள், பிளக்ஸ் பேனர்கள், அறிவிப்பு பலகைகள் உள்ளிட்டவற்றால், ரோடு சுருங்கி வாகன போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. குடியிருப்புகள் நிறைந்த இப்பகுதியில். சிலர் இறந்த கோழிகள், கோழி கழிவுகளை வீதிகளிலும், பி.ஏ.பி., வாய்க்காலை ஒட்டியும் திறந்த வெளியில் வீசி செல்கின்றனர். இவற்றால், கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது.
வீதிதோறும் தெருநாய்கள், குழந்தைகள், பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. இப்பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்தித் தருமாறு, கலெக்டர், பி.டி.ஓ., மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தும் பயனில்லை. தீர்க்கப்படாத இப்பிரச்னைகளால் அன்றாடம் அவதிக்குள்ளாகி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.