sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மாநகராட்சியுடன் இணைப்பு: ஊராட்சிகள் கடும் எதிர்ப்பு

/

மாநகராட்சியுடன் இணைப்பு: ஊராட்சிகள் கடும் எதிர்ப்பு

மாநகராட்சியுடன் இணைப்பு: ஊராட்சிகள் கடும் எதிர்ப்பு

மாநகராட்சியுடன் இணைப்பு: ஊராட்சிகள் கடும் எதிர்ப்பு


ADDED : டிச 25, 2024 11:17 PM

Google News

ADDED : டிச 25, 2024 11:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர், ; மாநகராட்சியுடன் இணையும் போது, கிராமப்புற மக்களின் சொத்துவரி பல மடங்கு உயரும் அளவுக்கு, அடிப்படை வசதிகள் கிடைக்குமா என, ஊராட்சி தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமிழகத்தில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளை ஒட்டி அமைந்துள்ள, கிராம ஊராட்சிகள், எதிர்கால நலன் கருதி, நகர உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. உத்தேச பட்டியல் தயாரித்து, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இணையும் ஊராட்சிகள் உத்தேசப்பட்டியல்


ஊத்துக்குளி ஒன்றியத்தில் இருந்து, அ.பெரியபாளையம், எஸ்.பெரியபாளையம் ஊராட்சிகள், திருப்பூர் ஒன்றியத்தில் இருந்து, முதலிபாளையம், இடுவாய், காளிபாளையம், பெருமாநல்லுார், கணக்கம்பாளையம், மங்கலம் ஊராட்சிகள், பல்லடம் ஒன்றியத்தில் இருந்து, கரைப்புதுார் ஊராட்சி, அவிநாசி ஒன்றியத்தில் இருந்து பழங்கரை, கணியாம்பூண்டி ஊராட்சிகள்; பொங்கலுார் ஒன்றியத்தில் இருந்து நாச்சிபாளையம் ஆகிய 12 ஊராட்சிகள், மாநகராட்சியுடன் இணைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.பல்லடம் நகராட்சியுடன், ஆறுமுத்தாம்பாளையம், வடுகபாளையம், மாணிக்காபுரம் ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளன. உடுமலை நகராட்சியுடன், கணக்கம்பாளையம், பெரியகோட்டை, கண்ணமநாயக்கனுார் ஊராட்சிகள் இணைகின்றன.

தாராபுரம் நகராட்சியுடன், கவுண்டச்சிபுதுார், நஞ்சியம்பாளையம் ஊராட்சிகளும், காங்கயம் நகராட்சியுடன் நத்தக்காடையூர் ஊராட்சியும், குன்னத்துார் பேரூராட்சியுடன், கம்மாளக்குட்டை, நவக்காடு, கருமஞ்சிறை ஊராட்சிகளும், கணியூர் பேரூராட்சியுடன், ஜோத்தம்பட்டி ஊராட்சியும் இணைய உள்ளது.

உத்தேச அறிக்கை வெளியிடப்பட்டு, 25 ஊராட்சிகளை, நகர உள்ளாட்சிகளுடன் இணைப்பதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகிறது; இதுவரை, அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை. கடந்த மாதம், 26ம் தேதி, இணைய உள்ள ஊராட்சிகளின் அடிப்படை விவரங்கள் கேட்டு பெறப்பட்டுள்ளன.

ஊரக உள்ளாட்சித்தேர்தல் தள்ளிப்போகிறது


கிராம ஊராட்சிகளை இணைக்க வேண்டாமென, ஊராட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனால், ஊரக உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள் பதவிக்காலம் முடிந்த பிறகு, இப்பணிகள் முழு வேகமெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள, ஒன்பது மாவட்டங்கள் நீங்கலாக, 27 மாவட்டங்களில் உள்ள, ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் வரும், ஜன., 5ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதுவரை தேர்தல் ஏற்பாடுகள் இல்லாததால், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்க வாய்ப்பில்லை.

மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் விரிவாக்கப்பணி நடக்க இருப்பதால், அதன்பின், ஒன்றுபட்ட உள்ளாட்சி தேர்தலாக நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.

ஒருங்கிணைந்த உள்ளாட்சி தேர்தல்


கிராம ஊராட்சிகளின் பதவிக்காலம் முடிந்ததும், தனி அலுவலர்கள் நியமித்து, நகர உள்ளாட்சிகளுடன் இணைக்கும் பணி நடக்கும். மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டு பிரிப்பு பணி நடக்கும். மீதியுள்ள ஊராட்சிகளை கொண்டு, ஒன்றியம் வாரியாக, 5,000 ஓட்டுக்களை கொண்ட ஒன்றிய வார்டு, 50 ஆயிரம் ஓட்டுக்களை கொண்ட மாவட்ட ஊராட்சி வார்டு பிரிக்கும் பணியும் நடக்கும்; இப்பணிகளை முடித்த பிறகு, நகர உள்ளாட்சிகளின் பதவிக்காலம் முடிந்து, ஒருங்கிணைந்த உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம், வரும் ஜன., 5 உடன் நிறைவு பெறுகிறது.

ஊராட்சிகளில் உள்ள நிதியை பயன்படுத்தி, அவசர பணிகளை செய்ய, மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்கின்றனர். பணிகள் முடிந்த பிறகு, அதற்கான 'பில்' கொடுப்பது சிரமமாக மாறிவிடும்; குழப்பம் ஏற்படும்.

பி.டி.ஓ.,க்கள் கூறுகையில், 'தேர்தல் அறிவிப்பு இல்லாததால், உள்ளாட்சி நிர்வாகம், தனி அலுவலர் வசம் ஒப்படைக்கப்படும். கடைசி நேரத்தில், ஊராட்சி நிதியை விரயம் செய்வதை தடுக்க வேண்டுமென, உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி, ஊராட்சிகளில் கடைசி நேரத்தில் நடக்கும் பணிகளையும், நிதி நிர்வாகத்தையும் கண்காணிக்க வேண்டுமென, மண்டல துணை பி.டி.ஓ.,களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.' என்றனர்.வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு ஆகியவற்றை மேற் கொண்ட பின்பே, ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறும் என அரசுத் தரப்பு கூறி யுள்ளதால், ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் உடனடியாக நடைபெற வாய்ப்பு இல்லை.

''மக்கள் தங்களில் ஒருவரைப் பிரதிநிதியாக்குவதன் மூலம், தங்கள் பகுதி சார்ந்த பிரச்னைகளை அரசின் நிர்வாகத்துக்குக் கொண்டு சேர்ப்பது உள்ளாட்சித்தேர்தல் மூலம் எளிதில் சாத்தியமாகிறது. பணியை அரசு அதிகாரிகளிடம் ஒப்படைப்பதால் சாமானியர்கள் நிர்வாகத்தை எளிதாக அணுக முடியாத சூழல் ஏற்படும்.

மேலும், அதிகாரிகளின் பணிச்சுமையும் கூடும். எனவே உள்ளாட்சித்தேர்தலை விரைந்து நடத்த வேண்டும்'' என்ற கோரிக்கையும் வலுவாக எழுந்துள்ளது.

ஊராட்சித் தலைவர்கள் நம்மிடம் பகிர்ந்தவை:

மருதாசலமூர்த்தி, மங்கலம்: மங்கலம் ஸ்டேஷன் மாநகர போலீசுடன் இணைக்கப்பட்டுள்ளது; இனி, ஊராட்சியும் மாநகராட்சியுடன் இணையும்; அரசு முடிவு செய்துவிட்டது. ஊராட்சிகளை இணைக்க கூடாதென, கிராமசபா மற்றும் ஊராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, கலெக்டருக்கு அளித்துள்ளோம்.

கணேசன், இடுவாய்: கிராம மக்களுக்கான, 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் பறிபோகும். கடந்த முறை, மாநகராட்சியுடன் இணைத்த ஊராட்சி பகுதிகளில், இன்றுவரை அடிப்படை வசதி முழுமை பெறவில்லை; வரி மட்டும் உயர்ந்துள்ளது. இனிமேல் இணையும் ஊராட்சிக்கும் அதேநிலைதான் வரும். சொத்துவரி மட்டும் பல மடங்கு அதிகரிக்கும்; கிரய செலவு கூட, ஏழு மடங்கு அதிகமாகும் என்கின்றனர். இடுவாயை இணைக்க வேண்டாம் என்பதுதான், அனைத்து கட்சிகளின் முடிவு.

சண்முகசுந்தரம், கணக்கம்பாளையம்: ஊராட்சி அளவில் இருக்கும் போது, குக்கிராமங்களின் தேவைகள் நிறைவேறும்; மாநகராட்சியாகிவிட்டால், சிறப்பு கவனம் செலுத்த மாட்டார்கள்.

மாநகராட்சியுடன் இணைக்காமல், கணக்கம்பாளையத்தை, பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளோம். சொத்துவரி பல மடங்கு அதிகரிக்கும் அளவுக்கு, கிராமப்புற மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.






      Dinamalar
      Follow us