/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எம்.ஜி.ஆர்., - என்.எஸ்.பி., நகர் முன்னுதாரணம்; மக்களுக்காக மக்களே உருவாக்கிய வசதிகள்
/
எம்.ஜி.ஆர்., - என்.எஸ்.பி., நகர் முன்னுதாரணம்; மக்களுக்காக மக்களே உருவாக்கிய வசதிகள்
எம்.ஜி.ஆர்., - என்.எஸ்.பி., நகர் முன்னுதாரணம்; மக்களுக்காக மக்களே உருவாக்கிய வசதிகள்
எம்.ஜி.ஆர்., - என்.எஸ்.பி., நகர் முன்னுதாரணம்; மக்களுக்காக மக்களே உருவாக்கிய வசதிகள்
ADDED : ஜூலை 20, 2025 04:42 AM

திருமுருகன் பூண்டி நகராட்சியின் 4 மற்றும் 5 ஆகிய இரு வார்டுகளுக்கும் உட்பட்ட பகுதியாக அமைந்துள்ளது எம்.ஜி.ஆர்., - என்.எஸ்.பி., நகர். சினிமாவில் வரும் இரட்டை நாயகர்கள், இரட்டை இசை அமைப்பாளர் போல், இரு குடியிருப்பு பகுதிகளையும் உள்ளடக்கியதாக இங்குள்ள குடியிருப்போர் நலச் சங்கம் அமைந்துள்ளது. எம்.ஜி.ஆர்., நகர் பகுதியும், என்.எஸ்.பி., நகர் பகுதியும் இணைந்து எம்.ஜி.ஆர். - என்.எஸ்.பி., நகர் குடியிருப்போர் நலச்சங்கம் என்ற அமைப்பைச் செயல்படுத்தி வருகின்றனர்.
குடியிருப்போர் நலச்சங்க தலைவர் வேதகிரி, செயலாளர் சரவணன், பொருளாளர் செந்தில்குமார் மற்றும் துணை தலைவர் ஜோதிமுருகன் ஆகியோர் கூறியதாவது:
எங்கள் குடியிருப்பு பகுதி கடந்த 1992 ம் ஆண்டு வாக்கில் அமைக்கப்பட்டது. ஏறத்தாழ 200 வீடுகளும், அருகேயுள்ள என்.எஸ்.பி. நகரில் 100 வீடுகளும் உள்ளன. குடியிருப்பு பகுதி அமைக்கப்பட்டு மனைகள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், சில ஆண்டுகளுக்குப் பின்பே இங்கு வீடு கட்டி உரிமையாளர்கள் குடியேறினர். திருமுருகன் பூண்டி பேரூராட்சியாக இருந்த போது உரிய மனைப்பிரிவு அங்கீகாரத்துடன் இம் மனைப்பிரிவு அமைக்கப்பட்டது.
கட்டப்பட்ட கோவில்
எங்கள் அமைப்பின் சார்பில் கோவில் கட்டப்பட்டுள்ளது. செல்வ விநாயகர், தாய் மூகாம்பிகை மற்றும் வள்ளி தெய்வானை சமேதராக சுப்ரமணியர் சன்னதிகள் உள்ளன. மேலும், பரிவார தெய்வங்களுக்கும் தனி சன்னதிகள் உள்ளன. ஆண்டு தோறும் கோவில் ஆண்டு விழாவும், குடியிருப்போர் சங்கத்தின் ஆண்டு விழாவும் நான்கு நாட்கள் நடைபெறும். எங்கள் குடியிருப்பு மட்டுமின்றி, அருகேயுள்ள 15 குடியிருப்பு பகுதிகளைச் சேர்ந்தோரும் இதில் கலந்து கொள்வர்.
சங்கத்தின் சார்பில் சிறிய தேரும் அமைக்கப்பட்டு, தேரோட்ட நிகழ்வும் நடத்தப்படுகிறது. இந் நிகழ்ச்சியில் அனைத்து தரப்பினரும் பங்கேற்கும் வகையில் விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்துவதோடு இந்த விழா நாட்களில் முழுமையாக அனைவருக்கும் கோவிலில் தான் அன்னதானம் நடைபெறும். எங்கள் பகுதியினரின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக இந்த விழா நடைபெற்று வருகிறது. மேலும் இங்குள்ள மைதானத்தில் சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய தேசியப் பண்டிகைகளும் சிறப்பான முறையில் ஒன்று சேர்ந்து கொண்டாடுவது வழக்கம். மாதம் தோறும் சங்கடஹர சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெறும்.
கண்காணிப்பு கேமராக்கள்
திருப்பூர் நகரப் பகுதியில் முதன் முதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட பின், இரண்டாவதாக எங்கள் குடியிருப்பு பகுதியில் தான் நடைமுறைப்படுத்தினோம். கடந்த 2013 ஆண்டிலேயே அப்போதைய மாநகர போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு இதை இங்கு துவக்கி வைத்தார். மொத்தம் 16 இடங்களில் இதைப் பொருத்தியுள்ளோம். இது எங்கள் அலுவலகத்தில் பதிவுகள் கண்காணிக்கப்படுகிறது. அத்தோடு சங்க நிர்வாகிகள் மொபைல் போன்களிலும் அதைக் கண்காணிக்கும் வசதி ஏற்படுத்தியுள்ளோம்.
மேலும் சங்கத்தின் சார்பில் பல தரப்பினரும் பயன்பெறும் வகையில் பாலிதின் ஒழிப்பு, ெஹல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தியுள்ளோம். ஆண்டு தோறும் எங்கள் பகுதியில் பொது மருத்துவ முகாம் பிரபல மருத்துவமனை மருத்துவர் குழு மூலம் நடத்தி வருகிறோம். இதன் மூலம் எங்கள் பகுதியினர் உடல் நலத்தையும் முறையாக பாதுகாத்து வருகிறோம்.
விளையாட்டு மைதானம்
எங்கள் பகுதியினர் நலனுக்காக சங்கத்தின் சார்பில், ஷட்டில் காக் கோர்ட் அமைத்துள்ளோம். தினமும் பலரும் இதைப் பயன்படுத்தி வருகின்றனர். ஜிம் உபகரணங்களும் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. அவிநாசி ரோட்டிலிருந்து எங்கள் குடியிருப்புக்கு வரும் ரோட்டை எங்கள் சங்கத்தின் சார்பில் புதிதாக அமைத்துள்ளோம். அதே போல் குறுக்கு ரோடுகளிலும் சேதமானால் பேட்ச் ஒர்க் செய்து விடுகிறோம். அவ்வப்போது துாய்மைப் பணியும் எங்கள் பகுதியினர் இணைந்து மேற்கொண்டு வருகிறோம்.
முக்கிய நிகழ்வுகளின் நினைவாக மரக்கன்றுகள் நடுவதும், அதைப் பராமரிப்பதும் ஆரம்ப காலம் முதல் பின்பற்றி வருகிறோம். அவ்வகையில் வைக்கப்பட்ட மரக்கன்றுகள் தற்போது பெரிய மரங்களாக வளர்ந்து பயன் தருவதாக உள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.