/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மைக்ரோ பிளாஸ்டிக் அபாயம் கருத்தரங்கில் எச்சரிக்கை
/
மைக்ரோ பிளாஸ்டிக் அபாயம் கருத்தரங்கில் எச்சரிக்கை
மைக்ரோ பிளாஸ்டிக் அபாயம் கருத்தரங்கில் எச்சரிக்கை
மைக்ரோ பிளாஸ்டிக் அபாயம் கருத்தரங்கில் எச்சரிக்கை
ADDED : டிச 11, 2025 04:46 AM

பல்லடம்: பல்லடம் 'வனம்' அமைப்பின், வான் மழை கருத்தரங்கம், வனாலயம் வளாகத்தில் நடந்தது. அதன் தலைவர் சின்னசாமி, பொருளாளர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தனர். அமைப்பின் செயலாளர் சுந்தர்ராஜன் வரவேற்றார்.
இதில், சென்னை சவீதா பல்கலை பேராசிரியர் அசோக்குமார் வீரமுத்து பேசியதாவது:
உலகிலுள்ள முக்கிய பிரச்னைகளில் ஒன்று கழிவு மேலாண்மை. பள்ளி மாணவர்களிடம் இருந்தே கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இன்று, 75 சதவீதம் கழிவு மேலாண்மை செய்யப்படுவதாக அரசு ஆவணங்களில் கூறப்பட்டாலும், உண்மையில், 15 -- 30 சதவீதம் மட்டுமே மேலாண்மை செய்யப்படுகிறது.
மீதமுள்ள 70 சதவீத கழிவுகள் ரோட்டில் தான் உள்ளன. கழிவுநீரை பூமியில் விடுவதால் இன்று மிகப்பெரிய பிரச்னைகளை சந்தித்து வருகிறோம். 12 முக்கிய ஆறுகள், இதனால் மாசடைந்துள்ளன. கழிவு நீரை வளமாக்குவதற்கு அதிக செலவாகும் என்பதாலேயே, அரசும் இது குறித்து கண்டுகொள்ளாமல் உள்ளது.
இன்றைய சூழலில், பயன்படுத்திய ஒரு பொருளை துாக்கி எறியாமல், மறுசுழற்சி முறையில் அதனை எவ்வாறு மீண்டும் பயன்படுத்துவது என்ற தொழில்நுட்பம் மிக அவசியம்.
பேப்பர் கப் மூலம் டீ குடிக்கும் போது கண்ணுக்கு தெரியாத மைக்ரோ பிளாஸ்டிக் உடலுக்குள் சேர்கிறது. இதை முழுமையாக ஒழிக்க வேண்டியுள்ளது. சாதாரண ஒரு பெட்டிக்கடையில் கூட ஒரு லாரி லோடு பிளாஸ்டிக் உள்ளது.
நீர், நிலம், காற்று என, நாம் தினசரி குடிக்கும் கேன் தண்ணீரிலும் கூட மைக்ரோ பிளாஸ்டிக் கலந்துள்ளது. நாம் கொட்டும் பிளாஸ்டிக்கால், நாம் மட்டுமின்றி அனைத்து உயிர்களும் பாதிக்கப்படுகின்றன.
ஆண்டுக்கு, 1.5 மில்லியன் நீர்வாழ் உயிரினங்கள் அழிகின்றன. தாய்ப்பாலில் கூட மைக்ரோ பிளாஸ்டிக் கலந்துள்ளது. குழந்தையின்மைக்கு முக்கிய காரணமாகவும் இது உள்ளது. அரசு, சட்டங்களை கடுமையாக்கினால்தான் இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும்.

