ADDED : ஆக 26, 2026 04:40 PM
திருப்பூர், ஆக. 27–
நபிகள் நாயகம் பிறந்த நாளான மிலாடி நபியை முன்னிட்டு, திருப்பூர் மிலாடி நபி கமிட்டி சார்பில், நபிகள் நாயகத்தின் புகழ்பாடும் பேரணி நேற்று நடைபெற்றது.
திருப்பூர் வட்டார ஜமா அத்துல் உலமா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தாவத்–இ– இஸ்லாமிய தர்காக்கள் பேரவை மற்றும் பிற அமைப்புகள் சார்பில், ஆண்டுதோறும் மிலாடி நபி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நகரின் மசூதிகளில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. தொடர்ந்து, 14-ம் ஆண்டாக நபிகள் நாயகத்தின் புகழ்பாடும் பேரணி நடந்தது.
பெரியகடை வீதியில் உள்ள மசூதியில் துவங்கிய பேரணியில், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் பங்கேற்றனர். முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற பேரணி, காங்கயம் கிராஸ் ரோடு, பஸ் டிப்போ பஸ் நிறுத்தம் வரை சென்றது.
தீன் கொடிகளை ஏந்தியும், நபிகள் நாயகத்தின் பெருமைகளைப் போற்றும் மவுலுாது பாடல்களைப் பாடியும் இஸ்லாமியர்கள் பேரணியில் பங்கேற்றனர். சிலர் குதிரை வண்டிகளிலும் சென்றனர்.
தொடர்ந்து, மிலாடி நபி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று பேசினர்.
-------–––
திருப்பூர் மிலாடி நபி கமிட்டி சார்பில், நபிகள் நாயகத்தின் புகழ்பாடும் பேரணி நேற்று நடைபெற்றது.
