/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேசம் காத்த வீரர்கள் வாழ்ந்த 'மிலிட்டரி காலனி'
/
தேசம் காத்த வீரர்கள் வாழ்ந்த 'மிலிட்டரி காலனி'
ADDED : நவ 03, 2024 11:25 PM

திருப்பூர், ராயபுரத்தில், மிலிட்டரி காலனி உள்ளது. இந்தப் பெயரைத் தாங்கி இந்தக் காலனி உள்ளது எத னால் என்ற கேள்விக்கு, பலருக்கும் விடை தெரியாமல்தான் இருக்கும்.
நான்கு தலைமுறைகளாக...
இந்திய ராணுவ முன்னாள் படைவீரர் சங்க கூட்டமைப்பு மாநில தலைவர் முரளிதரனிடம் கேட்டபோது, ''இரண்டாம் உலகப்போரின்போது பணியில் இருந்த, திருப்பூர் பகுதியைச் சேர்ந்த படைவீரர்களுக்கு இலவசமாக இங்கு நிலம் ஒதுக்கப்பட்டது. இதில், நான்கு தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்துள்ளனர். இவர்களில் பல குடும்பங்கள் வெளியேறிவிட்டன'' என்றார்.
பதுங்குகுழியில் மலைப்பாம்புகள்
இங்கு வசித்துவரும் முன்னாள் ராணுவ வீரர் காளிமுத்து மகள் சாவித்திரி கூறியதாவது:
போரின்போது எதிரிகள் இந்தியப் படையைத் தாக்கியபோது பதுங்கு குழிக்குள் என் தந்தை உள்ளிட்டோர் மறைந்தனர். பதுங்குகுழிக்குள் மலைப்பாம்புகள் இருந்தன. ஒரு மலைப்பாம்பு, ஒரு வீரரைக் கொன்றது.
மலைப்பாம்பு உள்ளதற்காக சத்தம் போட்டு எழுந்தால், குண்டுகள் தாக்கி அனைவரும் இறந்திருக்க நேரிடும். இதனால் மலைப்பாம்புகளுடனேயே பதுங்குகுழிக்குள் இருந்தனர். இதை என் தந்தை என்னிடம் கூறியபோது சிலிர்த்தது.
எதிரிகள் சென்றுவிட்டதாக கருதி இவர் பதுங்குகுழியில் இருந்து வெளியே வந்தபோது, இவரது தொடையில் குண்டு பாய்ந்துள்ளது. எதிரிகள் இறந்துகிடக்கும் வீரர்களின் சடலங்களை, துப்பாக்கி முனையில் உள்ள கத்தியால் குத்திப் பார்த்தபடி வந்தனர். இவர் ஒரு சடலத்துக்கு அடியில் காயங்களுடன் படுத்து தப்பினார்.
இவரது தாய்க்கு, அதாவது என் பாட்டிக்கு இவர் இறந்துவிட்டதாக தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து இவர் தனது புகைப்படத்தை எடுத்து கடிதம் மூலம், தாய்க்கு அனுப்பி, தான் உயிருடன் இருப்பதை நிரூபித்துள்ளார்.
மிலிட்டரி கேன்டீன்திருப்பூரில் தேவை
தந்தை சொல்லும்போதெல்லாம், நாங்களும் ராணுவத்தில் இணைந்திருக்கலாம் என்று தோன்றும். தேசப்பற்றும் எங்களிடம் பொங்கும்.
பணியில் இருந்து ஓய்வுபெற்றவுடன் பென்சன் வேண்டுமா; அல்லது 500 ரூபாய் செட்டில்மென்ட் செய்துகொள்ளலாமா என்று அதிகாரிகள் தரப்பில் கேட்கப்பட்டதாம். பென்சன் தான் வேண்டும் என்று வலியுறுத்தியவர் என் தந்தைதான்.
திருப்பூரில் முன்னாள் படைவீரர் சங்கம் உருவாகவும் காரணமாக அமைந்தார். மிலிட்டரி கேன்டீன் திருப்பூரில் தேவை என்று இவர் தொடர்ந்து வலியுறுத்தினாலும், இன்னும் அது நிறைவேற்றப்படாமலேயே உள்ளது.
இவ்வாறு, சாவித்திரி கூறினார்.
சீன ராணுவத்தினரின்கொரில்லா தாக்குதல்
இங்கு வசித்து வரும் முன்னாள் ராணுவ வீரர் அரவிந்தாக்ஷன் மகன் தீபக் கூறியதாவது:
1962ல் சீனப்போரின் போது, சிக்னல் மேனாக என் தந்தை அரவிந்தாக்ஷன் பணிபுரிந்தார். அப்போது சீன வீரர்கள் கொரில்லா தாக்குதல் நடத்தினர்.
தவளை போல ஒவ்வொரு வீரரும் தவழ்ந்துவந்தபோதுதான், தாக்குதல் நடத்தத்தான் இவர்கள் வருகின்றனர் என்பது நம் வீரர்களுக்குத் தெரியவந்தது. இதில் தன்னுடன் இருந்த பல வீரர்களை, சீன ராணுவத்தினர் பிணைக்கைதிகளாக பிடித்துச்சென்றனர்.
என் தந்தை தொலைதுாரத்தில் இருந்து இதை மனவேதனையுடன் கண்ணுற வேண்டியிருந்தது. இது தனது வாழ்க்கையில் பெரும் மன உறுத்தலாக இருந்தது என்று என் தந்தை இறுதிக்காலம் வரை கூறிக்கொண்டே இருப்பார்.
இவ்வாறு, தீபக் கூறினார்.