குறைந்தபட்ச ஊதியம் ரூ.42 ஆயிரம் ஏ.ஐ.டி.யு.சி. மாநாட்டில் தீர்மானம்
குறைந்தபட்ச ஊதியம் ரூ.42 ஆயிரம் ஏ.ஐ.டி.யு.சி. மாநாட்டில் தீர்மானம்
ADDED : செப் 20, 2026 07:42 PM
திருப்பூர், செப்.21–
எட்டு மணி நேர வேலைக்கு குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.42 ஆயிரம் நிர்ணயிக்க வேண்டும் என ஏ.ஐ.டி.யு.சி., திருப்பூர் மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
மாநாடு திருப்பூர் தெற்கு ரோட்டரி மஹாலில் நடந்தது. தேசிய செயலாளர் வகிதா நிஜாம் தொடங்கி வைத்தார். மேயர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியம் வாழ்த்திப் பேசினார்.
செயலாளர் நடராஜன் ஆண்டறிக்கையும், பொருளாளர் சவுந்திராஜன் வரவு–செலவு அறிக்கையும் சமர்ப்பித்தனர். புதிய தலைவராக மோகன், துணைத் தலைவர்களாக இசாக், பழனிசாமி, நடராஜன், செந்தில்குமார், பொதுச்செயலாளராக நடராஜன், செயலாளர்களாக சேகர், ரவி, செல்வராஜ், சுரேஷ், பஞ்சவர்ணம், பொருளாளராக சவுந்திராஜன் உள்ளிட்ட 35 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
தொழிலாளர் நலவாரிய அலுவலக குறைபாடுகளை சரிசெய்தல், கட்டுமானத் தொழிலாளர்கள் காத்திருக்கும் பகுதிகளில் கழிப்பிட வசதி ஏற்படுத்துதல், நலவாரியப் பயன்களை அதிகரித்தல், மாதந்தோறும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடத்துதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆட்டோ தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் டூவீலர் டாக்ஸிகளுக்கு தடை விதிக்க வேண்டும், விலைவாசிக்கு ஏற்ப குறைந்தபட்ச ஊதியம் ரூ.42 ஆயிரமாக நிர்ணயிக்க வேண்டும், திருப்பூரில் புதிய பாலங்கள் அமைக்க வேண்டும், தொழிலாளர்களுக்கு வீட்டுவசதி, மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டின் நிறைவில் தேசிய துணைத் தலைவர் எம்.பி. – சுப்பராயன் பேசினார்.
–––
2 படங்கள் – 3 காலம்
திருப்பூரில் நடந்த ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட மாநாட்டில், எம்.பி. சுப்பராயன், தேசிய செயலாளர் வகிதா நிஜாம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பங்கேற்றோர்.
